சென்னை, பிப். 2- பணிகள் நடைபெறவில்லை என்றால் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை என சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் 4ஆவது வார்டு உறுப்பினர் கேள்வி எழுப்பியதை அடுத்து அன்றே பணிகளை ஒப்பந்ததாரர் துவக்கினார். சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில் திருவொற்றியூர் மண்டலத்திற்குட்பட்ட மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன் பேசுகையில், கடந்த இரண்டு வருடங்களாக துருப்பிடித்த தெரு விளக்கு கம்பங்களை மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறேன். குறிப்பாக வி.பி. நகர், முல்லை நகர், ஜெய்ஹிந்த் நகர், மகாலட்சுமி நகர், சண்முகபுரம், பூம்புகார் நகர் போன்ற நகர்களில் மட்டும் சுமார் 600க்கும் மேற்பட்ட கம்பங்கள் துருபிடித்து விழுந்து விடும் நிலையில் உள்ளன. மிக்ஜம் புயலின் போது விழுந்த கம்பங்கள் கூட இன்னும் மாற்றப்படவில்லை. எப்போது மாற்றப்படும் என்பது குறித்து அறிவிக்க வேண்டும். உடனடியாக மின் கம்பங்களை மாற்றவில்லை என்றால் மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவதை தவிர வேறு வழியில்லை என்று கூறினார். இந்நிலையில் ஒப்பந்ததாரர் அன்றைய தினமே பணியை துவக்கி 13 தெருவிளக்கு கம்பங்களை மாற்றியமைத்துள்ளார். உடனடியாக மாற்ற வேண்டிய மின் கம்பங்களை மாற்றவும், மற்ற மின் கம்பங்களை மே மாதத்திற்குள் மாற்றித் தருவதாகும் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.