செங்கல்பட்டு, டிச.8- செங்கல்பட்டு அரசு தொழிற்பயிற்சி மைய வளாகத்தில் மதம் சார்ந்து விநாயகர் கோவில் கட்டுவதற்கு இந்திய மாணவர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு அடுத்த வெண்பாக்கம் பகுதியில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் இயங்கி வருகிறது. 500க்கும் மேற்பட்ட பல்வேறு மதத்தை சார்ந்த மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த வளாகத்தின் நுழைவு வாயில் அருகே ஒரு வார காலமாக ஒரு சிறிய கட்டிடம் கட்டப்பட்டு வந்தது. தற்போது அந்தக் கட்டடம் விநாயகர் கோவில் என தெரியவந்துள்ளது. தொழில் பயிற்சி நிலையத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் இணைந்து இந்த கோவிலை கட்டி வருவதாக கூறப்படுகிறது. பல்வேறு மதங்களை சார்ந்த மாணவர்கள் பயின்று வரும் அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்த வழிபாட்டு தளம் அமைப்பது மாணவர்களிடையே மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் ஆனந்தராஜ், மாவட்ட செயலாளர் தமிழ் பாரதி ஆகியோர் மாவட்ட ஆட்சியர் மற்றும் தொழிற்பயிற்சி நிலைய முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில், செங்கல்பட்டு அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் அனைத்து சமயங்கள் சார்ந்த மாணவர்களும் பயிலக் கூடிய நிலையில் இந்து மதம் சார்ந்து கோவில் கல்வி நிலைய வளாகத்தில் தற்போது கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. கல்வி நிலையத்தில் மதச்சார்பின்மையை கடைபிடிக்க வேண்டும் என்ற முறையில் கோவில் கட்டுமான பணியை நிறுத்தி அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து கல்லூரி முதல்வரிடம் கேட்டபோது , மாவட்ட ஆட்சியர் கோயில் குறித்து என்னிடம் விளக்கம் கேட்டுள்ளார். நிர்வாகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. உடனடியாக விநாயகர் கோவில் கட்டும் பணியை நிறுத்தி விட்டோம் என தெரிவித்தார்.