கிருஷ்ணகிரி,ஜூலை 27-
மாற்றுத்திறனாளி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் குற்றவாளிக்கு கிருஷ்ணகிரி நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அடுத்த தக்கட்டி கிராமத்தை சேர்ந்த கூலி வேலை செய்யும் திம்மராயன் (45). கடந்த 10.3.2010 அன்று அஞ்செட்டி அருகே அதே பகுதியை சேர்ந்த வாய் பேச இயலாத, காது கேளாத 3 வயது மாற்றுத்திறனாளி சிறுமியை சாக்லேட் வாங்கி தருவதாக ஏமாற்றி அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
‘அக்கம் பக்கம்’ உள்ளவர்கள் பார்த்து சிறுமியை மீட்டனர். இதுகுறித்து சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் திம்மராயன் அஞ்செட்டி காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நீதிபதி சுதா அளித்த தீர்ப்பில், “குற்றம் சாட்டப்பட்ட திம்ம ராயனுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தது. அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.
இதையடுத்து, குற்றவாளி திம்மராயன் உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அரசு தரப்பில் வழக்கறிஞர் உமாதேவி மங்கள மேரி ஆஜராகி வாதாடினார்.