திருப்போரூர். டிச. 3- செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த நெல்லி குப்பத்தில் ஆரம்பசுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து நெல்லிக்குப்பம் ஊராட்சி தலைவர் பார்த்தசாரதி கூறியதாவது: நெல்லிக்குப்பம் கிராமத்தில் இயங்கி வந்த மருத்துவமனை ஊராட்சிக்கு சொந்தமான நிலம் என்ற போதிலும், இப்பகுதியில் வசித்த ஜெயராமன் என்பவர் அவரது சொந்த செலவில் மருத்துவமனை கட்டிடத்தை கட்டித் தந்தார். அதனால், மருத்துவர்கள் தங்கும் அறை உள்பட பல்வேறு வசதிகளுடன் மிகப்பெரிய மருத்துவமனையாக இயங்கி வந்தது. ஆனால் அரசு நிதிச்சுமையை காரணம் காட்டி மருத்துவமனையை மூடிவிட்டனர். இதனால் கர்ப்பிணிப் பெண்கள் தங்களின் மகப்பேறுகால ஆலோசனைகள், மருத்துவ பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளுக்காக 15 கி.மீ. செல்ல வேண்டியுள்ளது. நெல்லிக்குப்பத்தில் 24 மணி நேர பேறுகால வசதியுடன் கூடிய ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நிலம் வழங்கவும், கட்டிடம் கட்டிக் கொடுக்கவும் ஊராட்சி நிர்வாகம் தயாராக உள்ளது. இதுதொடர்பாக, சட்டமன்ற உறுப்பினர் மற்றும் வட்டார வளர்ச்சி நிர்வாகத்திடம் பலமுறை மனுக்கள் வழங்கப்பட்டுள்ளன. எனவே, சுகாதாரத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார். இதுகுறித்து, செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் கூறியதாவது: ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என்றால் மக்கள் தொகை 30 ஆயிரமாக இருக்க வேண்டும். மேலும், 8 கி.மீ., தூரத்திற்குள் வேறு அரசு மருத்துவமனை இருக்கக்கூடாது. எனினும், நெல்லிகுப்பத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பது தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.