சென்னை, செப். 6- இணையதளம் இல்லாமல் இன்று எதுவும் இயங்காத நிலை உருவாகிவிட்டது. இதனால் மோசடி பேர்வழிகளும் தற்போது இணைய தளத்தையே தங்கள் கைகளில் எடுத்துள்ளனர். இணையதளம் மூலம் புதுப்புது வடிவங்களில் அவர்கள் மோசடியை அரங்கேற்றி வருகிறார்கள். இணையதளத்தில் மூழ்கி கிடக்கும் பட்டதாரிகள், ஐ.டி. ஊழியர்களை குறி வைக்கிறார்கள். அவர்களின் ஆசையை தூண்டி தங்கள் வலைக்குள் சிக்க வைக்கிறார்கள். இணையதள மோசடி சம்பவங்கள் அதிகரித்து வாரிம் நிலையில் இணைய தளத்தை பயன்படுத்தும் பொதுமக்கள் மிகவும் உஷாராக இருக்க வேண்டும் என்று காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து சைபர் குற்றப் பிரிவு காவல்துறையினர் கூறியதாவது:- கடன் தருவதாக செல்போன் செயலி மூலம் பணம் பறிக்கும் மோசடி சம்பவங்கள் தற்போது அதிக அளவில் நடந்து வருகிறது. பொதுமக்களை போனில் தொடர்புகொள்ளும் மர்ம நபர்கள், குறைந்த வட்டியில் கடன் தருவதாக ஆசை வார்த்தை கூறுகிறார் கள். எஸ்.எம்.எஸ். அனுப்பியும் கடன் வாங்குமாறு கோரிக்கை விடுக்கிறார்கள். தங்களின் கடன் செயலியை பதிவிறக்கம் செய்து கொண்டால் எப்போது வேண்டுமானா லும் கடன் வாங்கிக்கொள்ளலாம் என்று ஆசையை தூண்டுகிறார்கள். இதனை நம்பும் பலர் கடன் செயலியை தங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்கிறார்கள். மேலும் தங்கள் போனில் இருக்கும் நம்பர்கள், கேலரி, லோக்கேஷன் உள்பட அனைத்து விவரங்களையும் பயன்படுத்திக்கொள்ள, அந்த கடன் செயலிக்கு அனுமதியும் கொடுத்து விடுகிறார்கள்.
மேலும் கடன் பெறுவதற்காக அந்த செயலியில் தங்கள் செல்பி படத்தையும் பதிவிடுகிறார்கள். இதை பயன்படுத்தி மர்ம நபர்கள் தங்கள் மோசடியை தொடங்குகிறார்கள். செயலியை பதிவிறக்கம் செய்யும் முன்பு ரூ.1 லட்சம் கடன் பெறலாம் என்று கூறுவார்கள். ஆனால் வாடிக் கையாளர்கள் தங்களை பற்றிய அனைத்து விவரங்களையும் செயலி யில் பதிவிட்டபிறகு ரூ.7 ஆயிரம் வரை மட்டுமே கடன் பெற முடியும் என்று நிபந்தனை விதிப்பார்கள். முதலில் 90 நாட்கள் வரை வட்டி செலுத்த வேண்டாம் என்பார்கள். அதை நம்பி கடன் பெற்றால் அதற்கான வட்டியை முன் கூட்டியே பிடித்துக் கொண்டு 60 விழுக்காடு பணத்தை மட்டுமே நமக்கு தருவார்கள். கடன் பெற்ற 3-வது நாளில் இருந்தே அவர்கள் கொடுத்த கடன் தொகை மட்டுமல்லா மல் கூடுதலாகவும் பணம் கேட்டு மிரட்டுவார்கள். பணம் கொடுக்காவிட்டால் நமது கேலரியில் இருந்து அவர்கள் எடுத்த புகைப்படங்களை மார்பிங் செய்து அவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பி தொல்லை கொடுப்பார்கள். அவர்கள் கேட்ட தொகையை கொடுத்த பிறகுதான் அவர்களின் பிடியில் இருந்து வெளியே வர முடி யும். இந்த மோசடி கும்பல் பெரும்பா லும் வடமாநிலங்களில் இருந்தே செயல்படுகின்றன. குறிப்பாக உத்தர பிரதேசம், அரியானா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தபடி அனைத்து மாநிலங்களிலும் கைவரிசை காட்டுகிறார்கள். மேலும் மற்றொரு வகையான புதிய மோசடி யும் அரங்கேறி வருகிறது. இந்த மோசடி கும்பல் வீட்டில் இருந்தபடியே வேலை செய்யலாம் என்று கூறி ‘லிங்க்’ ஒன்றை செல்போனுக்கு அனுப்புவார்கள். இந்த வேலையில் சேர ஆர்வமாக இருப்பவர்களிடம் முதல்கட்டமாக குறைவான முன்பணம் கேட்பார்கள். பணம் செலுத்தியதும் எளிதான புராஜக்ட் ஒன்றை கொடுப்பார்கள். அதை செய்து முடித்து கொடுத்ததும் 2 மடங்கு பணத்தை சம்பந்தப்பட்ட வங்கி கணக்குக்கு அனுப்புவார்கள். அடுத்தடுத்து தரும் வேலைகளுக்கு இதே போல இரட்டிப்பு பணத்தை அனுப்புவார்கள். இந்த வேலையின் தரம் சில்வர், கோல்டு, பிளாட்டினம் என பல வகைகளை நோக்கி முன்னேறி செல்லும். அதன்பிறகு நமது ஆர்வத்தை பயன்படுத்தி லட்சக் கணக்கில் பணம் கட்ட சொல்வார்கள். கட்டிய பணம் இரட்டிப்பாக கிடைக்கும் என்ற ஆசையில் அவர்களை நம்பி பணம் கட்டினால் அதன் பிறகு அந்த கும்பல் பணத்தை மோசடி செய்து விட்டு நம்முடன் உள்ள தொடர்பை துண்டித்து விடும். அதன் பிறகு அந்த கும்பலை எந்த வகையிலும் தொடர்புகொள்ள முடியாது. பணம் போய் விடும். இந்த மோசடியில் பட்டதாரிகள், ஐ.டி. ஊழியர்கள் என ஏராளமானோர் கோடிக்கணக்கில் பணத்தை இழந்துள்ளனர்.
இதுபோன்ற மோசடிகளால் பணத்தை இழந்தவர்கள் சுமார் 70 விழுக்காடு பேர் புகார் செய்வது கிடை யாது. அவர்கள் புகார் செய்தால் மோசடி கும்பலை பிடிக்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள். இதுதொடர்பாக சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் கூறியதாவது:- தற்போது எல்லோருமே ஸ்மார்ட் போனையே பயன்படுத்துகிறார்கள். அவர்கள் தங்கள் ஸ்மார்ட் போன்களில் தேவையற்ற செயலிகளை பதி விறக்கம் செய்யக் கூடாது. பணத்தை யாருமே இலவசமாக தரமாட்டார்கள் என்ற உண்மையை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். தேவையற்ற மெயில், எஸ்.எம்.எஸ்.களை தவிர்க்க வேண்டும். தடை செய்யப்பட்ட இணைய தளங்களை பார்க்க கூடாது. உங்கள் கம்ப்யூட்டர், லேப்டாப் பில் தனிப்பட்ட தகவல்கள் இருந்தால் அவற்றை யாரும் திருட முடியாதபடி பாதுகாப்பாக வைத்திருக்க பாஸ்வேர்டு பயன்படுத்தி லாக் செய்து வைக்க வேண்டும். மோசடி கும்பலால் தாங்கள் ஏமாற்றப்பட்டது தெரிந்தால் உடனே வங்கிகளுக்கும், சைபர் கிரைம்க்கு காவல்துறையினருக்கு தகவல் கொடுக்க வேண்டும். இதன்மூலம் சம்பந்தப் பட்டவரின் வங்கி கணக்கை முடக்கி பணம் பறிபோவதை தவிர்க்கலாம். காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு கொடுத்தால் குற்றவாளிகளை விரை வாக பிடிக்க முடியும். மேலும் பலர் பாதிக்கப்படுவதை தடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.