districts

காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் டாஸ்மாக் சம்மேளன மாநிலக் குழு கூட்டத்தில் தீர்மானம்

திருவண்ணாமலை,ஜூலை 12-

     டாஸ்மாக் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்று சம்மேளன மாநில குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    டாஸ்மாக் ஊழியர் சம்மேளன மாநிலக் குழு கூட்டம் திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் முத்தம்மாள் நகரில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் பொன்முடி தலைமை தாங்கினார். பொது செயலாளர் திருச்செல்வன், பொருளாளர் சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    தமிழ்நாடு அரசின் கொள்ளை முடிவின் படி 500 டாஸ்மாக் கடைகள் கடந்த ஜூன் மாதம் 22 ஆம் தேதி மூடப்பட்டது. மூடப்பட்ட கடைகளில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு முறையாக பணி வழங்கப்படவில்லை. தென் சென்னை, வேலூர், திருப்பூர், திருவண்ணாமலை, சிவகங்கை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் பணி மூப்பு பட்டியல், கலந்தாய்வு வெளிப்படை தன்மையுடன்  நடத்தப்படவில்லை.  

    மதுக் கடைகளை காலை 7 மணிக்கு திறப்பது என்ற யோசனையை கைவிடவேண்டும். சென்னை தொழிலாளர் முதன்மை மற்றும் கூடுதல் தொழிலாளர் நீதிமன்றங்களின் உத்தரவுகளில்,  சுமார் ஒன்பது கோடி ரூபாய் அளவுக்கு ஊழியர்களுக்கு பணம் வழங்க வேண்டும். ஆனால், டாஸ்மாக் நிர்வாகம், நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தாமல், மேல்முறையீடு செய்துள்ளதை திரும்ப பெற்று, உத்தரவை அமல்படுத்த வேண்டும்.

    டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய சட்டப்படி ஊதியம் வழங்க வேண்டும். டாஸ்மாக் ஊழியர்க ளுக்கு வார விடுமுறை, தேசிய பண்டிகை கால விடுமுறை, மிகை நேரம் சட்டங்கள் படி வழங்க வேண்டும்.

    டாஸ்மாக் நிறுவனத்தில் 20 ஆண்டு களாக பணிபுரிந்து வரும் ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கைகளான பணி வரன்முறை, காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். டாஸ்மாக் ஊழியர்கள் மீது சமூக விரோதிகள் தாக்குதல் அதிகரித்து வரு கின்றன. கடந்த இரு தினங்களுக்கு முன்பு, கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்பார்வையாளர் கோபாலகிருஷ்ணன் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டு படுகாயம் அடைந்தார். இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும்.  

   மக்கள் நடமாட்டம் இல்லாத, காட்டுப்பகுதி, வயல்வெளி போன்ற இடங்களில் பாதுகாப்பில்லா கடைகளை இடம் மாற்றம் செய்ய வேண்டும் என்று இந்தக் கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.