சென்னை, டிச. 3- கொரியர் மற்றும் பார்சலில் போதைப்பொருட்கள் கடத்தப் படுவதை தடுக்க கூரியர் நிறுவன உரிமையாளர்களுக்கு காவல்துறை கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். சென்னையில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை தடுப்பதற்காக சென்னை காவல்துறை டிரைவ் அகைன்ஸ்ட் டிரக்ஸ் ஆப்பரேஷன் தொடங்கப்பட்டு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. குறிப்பாக இளைஞர்கள் மருந்தகங்களில் போதை மாத்திரைகள் மற்றும் வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி அதை பயன்படுத்தி குற்றச் செயல்களில் ஈடுபடுவதாக வந்த தகவலை அடுத்து மருந்தக உரிமையாளர்களுடன் காவல் துறை சார்பில் ஆலொசனை கூட்டம் நடத்தி அவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கொரியர் மற்றும் பார்சல் சேவை மூலமாக போதைப் பொருட்கள் அதிகளவில் கடத்தப்படுவதாக வந்த தகவலின் அடிப்படையில் உள்ளூர், உள்நாட்டு மற்றும் சர்வதேச கூரியர் பார்சல் சேவை நிறுவன நிர்வாக அதிகாரிகளுடன் கூடுதல் ஆணையர்கள் தலைமையில் காவல் ஆணையர் அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கலந்தாய்வு கூட்டத்தில் கூரியர் மற்றும் பார்சல் நிறுவனத்திற்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.