கிருஷ்ணகிரி, ஜன 24- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை வட்டம் சிங்காரப்பேட்டை பகுதி பெரியதள்ள பாடியிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 450 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் கழிப்பறை வசதியே இல்லை. இதனால் மாணவர்கள் இயற்கை உபாதைகளை கழிக்க திறந்த வெளியையே பயன்படுத்தி வரு கின்றனர். இதனால் துர்நாற்றம் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. மாணவிகள் பள்ளிக்கு வந்தது முதல் வீட்டுக்கு செல்லும் வரை இயற்கை உபாதைகளை கழிக்க கழிப்பிடம் இல்லாததால் மிகவும் அவதிப்படுகின்றனர். இதனால் மாணவிகளுக்கு தொற்று மற்றும் உடல் நலக் கோளாறு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. மேலும் பள்ளிக்கு சுற்றுச் சுவர் இல்லாததால் இரவு நேரங்களில் மது, போதை பொருள் பயன்படுத்துவோர், சமூக விரோத செயல்களில் ஈடுபடு வோரின் இருப்பிடமாக உள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் மாவட்ட கல்வி அலுவலர்கள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே உடனடியாக பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைத்து, சுகாதாரமான கழிப்பறை அமைக்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் இளவரசன், மாவட்டக் குழு உறுப்பினர் லெனின் முருகன், கிளைத் தலைவர் பிரகாஷ், செயலாளர் மாரிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.