திருவண்ணாமலை,டிச.7- திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலையில், கரும்பு விவசாயிகளின் பல்வேறு கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செய்யாறு சர்க்கரை ஆலையில் எத்தனால் உற்பத்தி பிரிவை உடனே துவக்க வேண்டும், கரும்பு அரவையை இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே துவங்க வேண்டும், கரும்பு லாரி ஆலைக்குள் நுழையும்போதே எடை போடவேண்டும், கரும்பு டன் ஒன்றுக்கு ரூபாய் 5 ஆயிரம் விலை வழங்க வேண்டும், வருவாய் பங்கீட்டு முறையை ரத்து செய்துவிட்டு, மீண்டும், மாநில அரசின் பரிந்துரை படி (எஸ்ஏபி) அடிப்படையில் விலை நிர்ணயம் செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆலை தலைவர் பெ.அரிதாசு தலைமை தாங்கினார். கரும்பு விவசாயிகள் சங்க அகில இந்தியத் தலைவர் த.ரவீந்திரன் உரையாற்றினார். மாவட்ட துணைத் தலைவர் ந.ராதாகிருஷ்ணன், ஆலை கிளைச் செயலாளர் நா.முனியன், பொருளாளர் சூரியகுமார், விவசாயிகள் சங்க பொருளாளர் தாமோதரன், சிபிஎம் நிர்வாகிகள் கி.வெங்கடேசன், அ. அப்துல்காதர், ம.மாரிமுத்து, வே. சங்கர் மற்றும் ஆலை சங்க நிர்வாகிகள் பெருமாள், ஏழுமலை, சதானந்தம், அர்ஜூனன், ஸ்ரீதர், துணைத் தலைவர்கள் வெங்கடேசன், ஜெயவேலு, ஜெயபால் உள்ளிட்ட பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.