திருவண்ணாமலை,ஜன.19- திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் பா.முருகேஷ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நெற்பயிர் வெள்ளத்தில் சேதமடைந்த அனைத்து விவசாயிகளுக்கு உரிய முறையில் ஆய்வு மேற்கொண்டு வெள்ள நிவாரணம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகள் தூர்வார உரிய நடவடிக்கை எடுக்கவும், கலசப்பாக்கம் மற்றும் துரிஞ்சாபுரத்தில் சாலை புனரமைத்த வேண்டுமெனவும், கமலா புத்தூர் ஏரி ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும் எனவும், வேளாண்மைத் துறையின் மூலம் நெல் மற்றும் உளுந்து விதைகளை போதிய இருப்பு வைத்து வழங்க வேண்டும் எனவும், பி.எம்.கிசான் நிதி உதவி தகுதியான விவசாயிகளுக்கு பெற்று வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், பட்டா மாறுதல் தொடர்பான மனுக்களுக்கு விரைவில் பதில் வழங்குவது உள்ளிட்ட விவசாயிகளின் கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட துறை அரசு அலுவலர்கள் விரைவில் தீர்வு காண மாவட்ட ஆட்சித்தலைவர் அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் தனிநபர் தொடர்பான மனுக்களை பெற்றுக் கொள்ளப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மு.பிரியதர்ஷினி, வேளாண்மை இணை இயக்குநர், சி.ஹரிகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) முனைவர் .உமாபதி, மண்டல இணை இயக்குநர், கால்நடை துறை சோமசுந்தரம், முன்னோடி வங்கி மேலாளர் கௌரி, அலுவலர்கள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.