districts

img

மாணவர்கள் மீது சாதிவெறி தாக்குதல்

உளுந்தூர்பேட்டை, அக்.19 - அரசு நகரப் பேருந்தை வழி மறித்து சாதி வெறியோடு பட்டியல் இன மாணவ மாணவி களை தாக்கிய நபர்களின்மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, கைது செய்யக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் உளுந்தூர்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உ.செல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் உளுந்தூர்பேட்டையில் கல்வி  பயின்று வருகின்றனர். இவர்களுக்கு  கூடுதல் பேருந்து வசதி கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய போராட்டத்தின் விளை வாக காலையில் அரசு பேருந்து மாணவர்களின் நலனுக்காக இயக்கப்பட்டது. இந்த பேருந்து உளுந்தூர்பேட் டையில் இருந்து உ.செல்லூர் பட்டியலின மக்கள் பகுதிக்கு சென்று, பின்னர் அங்கிருந்து உளுந்தூர்பேட்டைக்கு வருவதால் பட்டியல் இன மாணவர்கள் பேருந்தில் அமர்ந்து செல்லும் சூழல்  நிலவியது. இது சாதி ஆதிக்க சிந்தனையோடு இருந்த சிலரின் மனதை உறுத்தியுள்ளது. ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் அரிகோவிந்தன் என்பவர் பள்ளி மாணவர்களிடையே சாதிய  சிந்தனையை விதைத்து அவ்வப் போது சிறு, சிறு தகராறுகளை ஏற்படுத்தியுள்ளார். காவல் துறையில் தகவல் தெரிவித்த நிலை யில் நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல் துணை கண்காணிப்பாளர் பட்டிலின மாணவர்களுக்கு பேருந்தின் பின்பகுதியிலும் மாற்று சமூகத்தைச் சேர்ந்த மாண வர்களுக்கு பேருந்தின் முன் பகுதியி லும் அமர்ந்து வர ஏற்பாடு செய் துள்ளார். கடந்த 12ஆம் தேதி காலை அரசு பேருந்தில் உ.செல்லூர் கிரா மத்தைச் சேர்ந்த தலித் மாணவ,  மாணவிகள் பள்ளிக்கு செல்வதற் காக வந்துள்ளனர்.

வழியில் முன்  இருக்கைகள் காலியான நிலையில் அதில் பட்டியலின மாணவர்கள் அமர்ந்துள்ளனர். சாதி ஆதிக்க சிந்தனையோடு மாற்று சமூகத்தை சேர்ந்த அரிகோவிந்தன் என்ப வரின் தூண்டுதலின் பேரில் அதே  ஊராட்சியைச் சேர்ந்த உ.நெமிலி கிராமத்தில் வசிக்கும் ரங்கநாதன் என்பவரின் மகன் சிவராமன் மற்றும்  அவருடைய நண்பர்கள் 10 பேர் உ.நெமிலியில் இந்தப் பேருந்தை வழிமறித்து கீழ் சாதியை சேர்ந்த நீங்கள் எப்படி உட்கார்ந்து வரு வீர்கள்? எனக் கேட்டு வன்மத் தோடு தலித் மாணவர்கள்  மீது கொலை வெறித் தாக்குதல்  நடத்தியுள்ளனர். இதில் 7 மாணவி கள் மற்றும் 3 மாணவர்கள் படுகாயமடைந்து உளுந்தூர் பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். உடனடியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச்  செயலாளர் டி.எம்.ஜெய்சங்கர், திருநாவலூர் மேற்கு ஒன்றியச் செயலாளர் டி.எஸ்.மோகன் ஆகி யோர்  அறிக்கை வெளியிட்டதோடு பாதிக்கப்பட்ட மாணவர்களுடைய பெற்றோருடன் இணைந்து காவல்துறையில் புகார் அளித்து  நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி யுள்ளனர். ஆனால் காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காததால், இது சாதி ஆதிக்க வெறியோடு தாக்குதல் நடத்தியவர்களுக்கு சாதகமாக மாறியுள்ளது. எனவே பள்ளி மாணவ, மாணவிகளிடையே சாதிவெறியூட்டும் நபர்களை கைது செய்யாத காவல்துறையை கண்டித்தும், உடனடியாக எஸ்.சி,எஸ்.டி வன்கொடுமை தடுப்புச்  சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து  கைது செய்யக்கோரியும் கட்சியின் உ.நெமிலி ஊராட்சி கிளைகள் சார்பில் உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு  வியாழனன்று (அக்.19) ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. ஒன்றியச் செயலாளர் டி.எஸ்.மோகன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, மாவட்டச் செயலாளர் டி.எம்.ஜெய்சங்கர், செயற்குழு உறுப்பினர் கள் ஜி.ஆனந்தன், டி.ஏழுமலை, பி.சுப்பிரமணியன், கிழக்கு ஒன்றிய  செயலாளர் ஜெ.ஜெயக்குமார் உள்ளிட்டோர் கண்டன உரை யாற்றினர். இப்போராட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர் இ.அலமேலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.