விழுப்புரம், பிப்.20- அரசு வளர்ச்சி திட்ட பணிகளில் மெத்தனமாக செயல்படும் வானூர் வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்து விழுப்புரம் மாவட்டம், திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் செவ்வாயன்று வானூர் வட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டக் குழு உறுப்பினர் எஸ்.பாலமுருகன் தலைமை தாங்கினார், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் எஸ்.முத்துக்குமரன், எம்.கே.முருகன், மாவட்ட குழு உறுப்பினர் வி.அர்ச்சுனன் ஆகியோர் கலந்து கொண்டனர். திருச்சிற்றம்பலம் ஊராட்சியில்,காந்தி நகர் - அச்சரம்பட்டு அகலமான பிரதான சாலையை குறுக்கி, சிறிய சாலையாக மாற்றும் பிடிஒ-வின் மெகா மோசடியை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தும் காந்திநகர்-முருகன் கோயில் தெருவில் பள்ளம், படுகுழி, சேறும் சகதியுமாக பல ஆண்டுகளாக இருந்துவருகிறது. பல முறை புகார் அளித்தும் உள்ளாட்சி நிர்வாகம் கண்டுகொள்வதில்லை, அரசின் திட்டங்களை விரைவாக அமலாக்கம் செய்யாமல், அலட்சியப்படுத்தி ஒப்பந்த தாரர்களோடு கூட்டுச்சேர்ந்து மெத்தனமாக செயல்படும் வட்டார வளர்ச்சி அலுவலரின் செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிப்பதாக ஆர்ப்பாட்டத்தில் தலைவர்கள் பேசினர். இதில் ஐ. சேகர், வி. சுந்தரமூர்த்தி, ஆர்.சேகர், கே. மாயவன், ஏ. அன்சாரி, கே. நடராஜன்,ஜெ. முகமது அனீஸ், ஆர். விஸ்வநாதன், என். அசுவத்தாமன், கே. லலிதா ஆகியோர் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.