சென்னை, டிச.7- தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் தரவுகளில் “போலி உள்ளீடுகள்” (பதிவுகள்) செய்யப் பட்டுள்ளன என்ற அதிர்ச்சித் தகவல் வெளி யாகியுள்ளது. இதற்குக் காரணம், நிர்ணயிக்கப்பட்ட தடுப்பூசி இலக்கை எட்டமுடியாத நிலையில் போலி பதிவுகள் செய்யப்பட்டிருக்கலாம் என்று ஊடகச் செய்திகள் வெளியாகி யுள்ளன. மாநிலம் முழுவதும் உள்ள சுகாதாரப் பணியாளர்களிடம் நடத்திய விசாரணையில், கொரோனா தடுப்பூசித் தரவுகளில் பல போலி உள்ளீடுகள் இருப்பது உறுதிசெய்யப்பட்டது. தனிநபர்களின் அடையாள அட்டைகள், இறந்தவர்களின் செல்போன் எண்கள் ஆகியவற்றின் மூலம் இந்தப் பதிவுகள் நடை பெற்றதாக சுகாதாரத் துறை வட்டாரத்தி லிருந்து கிடைக்கப்பெற்ற நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. நீண்ட கால மாக பயன்பாட்டில் இல்லாத செல்போன் எண்களைப் பெற்றும் இந்தப் பதிவு நடைபெற்றுள்ளது. தவறான உள்ளீடுகள் குறித்த புகார்கள் மாநிலத்தின் பல பகுதிகளில் தாமதமாக வெளிவரத் தொடங்கியுள்ளது.
சென்னையில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத மூத்த குடி மகனின் செல்போன் எண்ணுக்கு, அவர் இறந்து சில மாதங்களுக்குப் பிறகு, அக்டோபர் மாதம் இரண்டு குறுஞ்செய்திகள் வந்துள்ளன. இந்தத் தகவலும் கூட இரண்டு வெவ்வேறு நபர்களுக்கு கோவிஷீல்டின் முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகச் சமீபத்தில், சில மாதங்களுக்கு முன்பு முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்ட அரசு ஊழியர் ஒருவருக்கு, இரண்டு முதல் மூன்று நிமிடங்களுக்குள் மூன்று நபர்களுக்கு தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக மூன்று குறுஞ்செய்திகள் வந்ததைக் கண்டு அவர் ஆச்சரியம் அடைந்துள்ளார். இவர்களில் ஒருவர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்.
மேலும் இரண்டு பேர் இரண்டு தவணை தடுப்பூசி யையும் செலுத்திக் கொண்டவர்கள் ஆவர். இது குறித்து மருத்துவ அதிகாரிகள் கூறுகையில், இந்தப் புகார்களில் பெரும் பாலானவை போலியான பதிவுகள் என்றனர். போலி பதிவுகள் ஒரு உண்மையான பிரச்சனை என்பதை ஒப்புக்கொண்டுள்ள சில அதிகாரிகள், யதார்த்தமற்ற தினசரி இலக்கு களை அடைவதற்கான அழுத்தம் தான் பலரை இந்த நிலைக்குத் தள்ளியுள்ளது.“ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தினசரி 250 டோஸ் இலக்கு வழங்கப்படுகிறது. அவர்களால் 75 முதல் 80 நபர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்த முடியும். எனவே, அவர்கள் தனிநபர்களிடமிருந்து அடையாள அட்டைகளையோ அல்லது நபர்களின் வரிசைப் பட்டியலைப் பெற்று போலியான பதிவுகளை செய்கிறார்கள். மக்களை தடுப்பூசி செலுத்திக் கொள்வ தற்கு விஞ்ஞானப்பூர்வ அணுகுமுறை மட்டுமே தேவை. இலக்குகள் அல்ல” என்கின்றனர். ஒரு அரசு மருத்துவர் கூறியுள்ள தகவல் தான் அதிர்ச்சியளிப்பதாய் உள்ளது. அவர் கூறியது இதுதான்: “தனது சக ஊழியர்கள் சிலர் நீண்ட நாட்களாக பயன்பாட்டில் இல்லாத மொபைல் எண்களின் டேட்டா பேஸை(விவரங்கள்) பெற்று போலியான பதிவுகளை செய்தனர்” என்கிறார்.
மேலும் அவர் கூறுகையில்” இலக்கு களை அடைய வேண்டுமென அழுத்தம் கொடுக்கப்படுவதால் அவர்களுக்கு வேறு வழியில்லை. இலக்கை நிறைவேற்றா விட்டால். கொரோனா தடுப்பூசி ஆய்வுக் கூட்டங்களில் அவர்களிடம் கேள்விகள் எழுப்பப்படுகிறது” என்கிறார். பெயர் கூற விரும்பாத ஒரு மருத்துவ அதிகாரி கூறுகையில், “ தடுப்பூசிக்கு இலக்கு களை நிர்ணயிக்க வேண்டாம். மாறாக பல்வேறு வழிகளில் தடுப்பூசி போடுவதற்குத் சுகாதாரத் துறை மக்களை ஊக்குவிக்க வேண்டும். இலக்கை முடிக்க அழுத்தம் அதிகரிப்பதால் சுகாதாரப் பணியாளர்கள் இலக்கை அடைய போலியான பதிவுகளை செய்கிறார்கள். இந்த இலக்குகளை எட்டாத ஊழியர்களுக்கு மெமோக்களும் வழங்கப்பட்டன” என்றார். கிராமப்புறத்தில் பணியாற்றும் ஒரு செவிலியர், ஒவ்வொரு வாரமும் தாமதமாக குறைந்தது நான்கைந்து பதிவுகளை செய்வதாக ஒப்புக்கொண்டுள்ளார். பல சுகாதாரப் பணியாளர்கள் கடுமை யான மன அழுத்தத்தில் இருப்பதாக சுகாதார அதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டுகிறார்.
“வீட்டுக்கு வீடு தடுப்பூசி இயக்கத்தின் போது கள அளவிலான ஊழியர்கள் அவமானப் படுத்தப்படுகிறார்கள். தடுப்பூசி போடு வதற்கு பொதுமக்களில் சிலர் தயக்கம் காட்டு கின்றனர். அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்கிறார் அவர். இந்தப் பிரச்சனை குறித்து பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருத்து வத்துறை இயக்குநர் டி.எஸ். செல்வவிநா யகம் கூறுகையில், “அனைத்து சுகாதார சேவைகள் துணை இயக்குநர்களுக்கும் (DDHS) சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. 2020-ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் கொரோனா பரவலைத் தடுப்பதற்கு ஊழியர்கள் பல்வேறு தியாகங்கள் செய்துள்ளனர். இந்தச் சம்பவங்கள் “மிகவும் வருந்தத் தக்கது மட்டுமல்ல, தண்டனைக்குரியதும் கூட. அனைத்து கள சுகாதார ஊழியர்கள், அவுட்சோர்சிங் ஊழியர்கள் இதுபோன்ற நடைமுறைகளில் ஈடுபட வேண்டாம்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார். இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது விதி களின்படி உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.