districts

img

பொய்வழக்குகளுக்கு அஞ்சாமல் அரிசி பஞ்சத்தை போக்கிய தோழர்கள் - கே.செல்வராஜ் சிபிஐஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் திருவள்ளூர் மாவட்டம்.

சுதந்திர இந்தியாவில் நிர்வாக நில வருவாய் துறையின் வசதிக்காக செங்கற்பட்டு மாவட்டம் எட்டு வட்டங்களாக பிரிக்கப்பட்டிருந்தது. இரண்டு, இரண்டு வட்டங்களைக் கொண்ட நான்கு கோட்டங்களாக இருந்தன. ஒன்றுபட்ட சென்னை செங்கை மாவட்டத்திலிருந்து 1981 ம் ஆண்டு செங்கை தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டது. 1-1-1997 ல் இரண்டாக பிரிக்க ப்பட்டு காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களாக அமைக்கப்பட்டன திருவள்ளூர் மாவட்டம் 1997ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதி  உதயமானது.  திருவள்ளூர், பூந்த மல்லி, ஊத்துக்கோட்டை, பொன்னேரி, அம்பத்தூர், கும்மிடிபூண்டி, திருத்தணி, பள்ளிப்பட்டு, மாதவரம் ஆகிய 9 தாலுகா மற்றும் 14 ஒன்றியங்கள் உள்ளன. 1964 ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இயக்கத்தில் பிளவு ஏற்பட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உதயமானது. திருவள்ளூர் மாவட்டத்தில் கட்சி வளர்ச்சி பெறுவதற்கு எண்ணற்ற தோழர்கள் மிகப் பெரும் பங்களிப்புகளை செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாய நிலங்கள் ஜமீன்தார்களின் கையிலும், பணக்கார விவசாயிகள் வசம் இருந்தது. குறிப்பாக பொன்னேரி பகுதியில் உழைக்கும் மக்கள், கூலித் தொழிலாளர்கள் எண்ணற்ற துயரங்களுக்கு ஆளானார்கள். இக்காலத்தில்தான் விவசாயிகளையும், கூலித் தொழிலாளிர்களையும் சங்கம் அமைத்து அணித் திரட்டினார் சி.கே. மாணிக்கம்.  பொன்னேரி ஆர். நாகரத்தினம் 1952 இல் ரயில்வேயில் கேங்மேன் தொழிலாளியாக பணியில் சேர்ந்தார். பொன்னேரி வட்டத்தில் சி.கே.மாணிக்கத்தினால் ஈர்க்கப்பட்டவர், தொழிற் சங்க இயக்கத்தில் அதிக ஈடுபட்டதால் வேலையிலிருந்து நீக்கப்பட்டார்.  பொன்னேரி சுற்று வட்டத்தில் பல கிராமங்களில் இரட்டை டம்ளர் முறை இருந்தது. 1957 ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பொன்னேரி தொகுதியில் சி.கே. மாணிக்கம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடுகிறார். வாக்கு சேகரிக்க தத்தமஞ்சி கிராமத்திற்கு செல்லும் போது தலித் மக்களுக்கு தனி டம்ளரில் டீ கொடுப்பதை பார்க்கிறார். உடனே தோழர்களுடன் சேர்ந்து தீண்டாமை கொடுமைக்கு எதிராக  வலுவான போராட்டத்தை அவர் நடத்தியதால் அந்த ஈனமுறை அகற்றப்்பட்டது.

உணவு பஞ்சம்

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் உணவுப் பஞ்சம். பொன்னேரிப் பகுதியில் உணவுக்கு வழியில்லாமல் கொட்டிக் கிழங்கை சமைத்து சாப்பிட்ட 70 பேர் வாந்தி, வயிற்றுப் போக்குக்கு ஆளாகி இறந்து போனார்கள். இதனால் ஆவேசமடைந்த  கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் சி.கே.மாணிக்கம், ஆர்.நாகரத்தினம், சுப்பிரமணி ஆகியோர் பொன்னேரி தாலுக்காவில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த அரிசி மூட்டைகளை கைப்பற்றி பொது மக்களுக்கு விநியோகிக்க முடிவெடுத்தனர். இந்த தகவல் அறிந்து பொன்னேரி தாசில்தார் தாமாக முன் வந்து அரிசி மூட்டைகளை கைப்பற்றி  தோழர்களிடத்தில் ஒப்படைத்தார். அதனை  பொதுமக்களுக்கு தோழர்கள் விநியோகித்தனர்.  பொன்னேரி நகரத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உயர் சாதியினர் துருப்பிடித்த தகர டப்பாவில்தான் தண்ணீர் ஊற்றி கொடுப்பார்கள். அல்லது இரண்டு கைகளாலும் அதை ஏந்திக் கொண்டு குடிக்க வேண்டும். துப்பரவு தொழிலாளர்கள் மாட்டு வண்டியில் உட்கார்ந்தபடி போக முடியாது.. இத்தகைய தீண்டாமை கொடுமைகளை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சி போராடியது. போராட்டங்களில் ஆர்.நாகரத்தினம் முக்கிய பங்காற்றினார்  1969 ம் ஆண்டு சி.கே.மாணிக்கம், ஆர். நாகரத்தினம் உள்ளிட்ட பல தோழர்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து  விலகி மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர். மீஞ்சூர் ஒன்றியத்தில் சி.கே.மாணிக்கம் காட்டூர் சிவலிங்கம் சி.எம்.சாமி, வீராசாமி போன்றோர்  தலைமையில் நில மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டபோது 500 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப் பட்டு சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.    சென்னையில் கட்சியின் முழு நேர ஊழியராக செயல்பட்டு திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதிக்கு 1975 ம் ஆண்டுவாக்கில் கட்சி பணிக்காக அனுப்பப்பட்ட தோழர் ஜி.மணி, பொன்னேரி, கும்மிடிபூண்டி, ஊத்துக்கோட்டை தாலுக்காக்களில் கட்சியின் வளர்ச்சிக்காக பெரும்  பங்காற்றினார்.

 பாலசந்திர மேனன் என்கிற மலையாளத் தோழர் முன்னாள் மேயர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமை ஏற்று தோல் பதனிடும் தொழிலாளர்களுக்காக 1945 ல் மாதவரத்தில்  தோல் பதனிடும் தொழிலாளர்  சங்கம் அமைத்து  நடத்தி வந்தனர். அந்த சமயத்தில்தான் தோழர் ஜீவாவின் போதனையை பெற்று மாதவரம் தோல் பதனிடும் தொழிலாளர் சங்கத்தில் சந்தா வசூலிக்கும் பையனாக தமது பொது வாழ்வு பயணத்தை துவங்கினார் மாதவரம் சி.கே.மாதவன். தலைவர்களோடு நெருங்கிய பழகியதால் பிற்காலத்தில் மக்கள் தலைவராக மாதவன் உருவெடுத்தார். அரிசி போராட்டம் தமிழ்நாட்டில் பக்தவச்சலம் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் கடுமையான அரிசி பஞ்சம். அந்த சமயம் பார்த்து அரிசி ஏற்றிக் கொண்டு ஒரு லாரி மாதவரம் தபால் பெட்டி வழியாக வருகிறது. இதை கம்யூனிஸ்ட் கட்சி இளைஞர்கள் பார்த்து விடுகின்றனர். லாரியை மடக்கி ஊருக்குள் கொண்டு வந்து நிறுத்தி தலைவர்களுக்கு தகவல் கொடுக்கின்றனர். சி.கே.மாதவன் உட்பட தோழர்கள் லாரியில் இருக்கும் அரிசியை வீட்டிற்கு இரண்டு படி என விநியோகம் செய்தனர். மிச்சம் இருக்கும் அரிசியை காசு இருப்பவர்கள் வாங்கிக் கொள்ளலாம் என்று அறிவித்து கொடுக்கின்றனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வந்த போலீஸ்காரர்களே காசு கொடுத்து அரிசி வாங்கிச் சென்றார்கள், அந்தளவுக்கு அப்போது அரிசி பஞ்சம் தலைவிரித்தாடியது. அரிசி விற்ற பணத்தையும் கோணிப்பைகளையும் மாதவன் லாரியில் வந்தவர்களிடமே கொடுத்து அனுப்பிவிடுகிறார்.  காவல்துறை சும்மா விடுமா? சி.கே. மாதவன் மீது திருவொற்றியூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. லாரி உரிமையாளர் நேர்மையாக  அரிசி விற்ற பணம் கோணி என அனைத்தையும் தோழர்கள் என்னிடம் அளித்து விட்டனர் என சாட்சியளித்தார். இதன் பின்னர் வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்தார். அதே போல் செங்குன்ற த்தில் அரிசி ஆலைகள் அதிகம் இருந்தாலும் அங்கும் அரிசி பஞ்சம் நிலவியது,. அப்போது செங்குன்றத்தில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் எம்.கே.கணேசன், ஆர்.எம்.சாமுவேல் ஆகியோர் சி.கே.மாதவனுடன் ஆலோசித்து ஒவ்வொரு அரிசி ஆலையிலும் 5 மூட்டை அரிசி என வாங்கி ஒரு படி மூன்று ரூபாய் என பொது மக்களுக்கு அளந்து கொடுத்தனர். இந்த போராட்டத்தில் சி.கே.மாதவனுடன் கே.எம்.ஹரிபட் பி.ஆர்.பரமேஸ்வரன் ஆகியோர் பங்கேற்றனர்.

 கட்சி பிரிவினை

 1964 ல் கட்சி நெருக்கடியை சந்திக்கிறது. ஆம் கட்சி பிளவு படுகிறது.  கட்சி கிளையை கூட்டி பெரும்பான்மை முடிவுப்படி முடிவெடுக்கலாம் என்று சி.கே.மாதவன் கூறினார். பெரும்பான்மை முடிவுப்படி அனைவரும் மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்தார்கள். முதல் கிளை உதயம்          அன்றைய செங்கை மாவட்டத் ்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அமைப்புக் குழு கூட்டம் பொன்னேரி கட்சி அலுவலகத்தில் 12-07-1959 ல் ஏ.சி.பார்த்தசாரதி தலைமையில் நடைபெற்றது.  கே.எஸ்.பார்த்தசாரதி, சி.கே.மாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டனர். ஒன்பது பேர் கமிட்டி தேர்வு.செய்யப்பட்டு அதற்கு செயலாளராக சி.கே.மாணிக்கம் பொறுப்பேற்றார். ஏ.சி. பார்த்தசாரதி, டி.யு.தம்பையா, கே.கே.நாராயணன், டி.வி.குப்புசாமி, கே.பாப்பையா, சி.கே.மாணிக்கம், நடராஜன், செஞ்சுராமலிங்கம், வி.பி.கோவிந்தசாமி ஆகியோர் அந்த கிளையில் செயல்பட்டனர். திருவள்ளூர் மாவடத்தில் 1957 ம் ஆண்டிற்கு முன்னரே பொன்னேரி, மீஞ்சூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் எண்ணற்ற தோழர்கள் கட்சியின் வளர்ச்சிக்காக பணியாற்றியுள்ளனர். அந்த மகத்தான செங்கொடி புதல்வர்களின் பாதையில் தொடர்ந்து பயணித்து கட்சியை பலப்படுத்துவோம்.

 

;