கடலூர், மார்ச் 12- மின்வாரியத்தின் தன்னிச்சையான நட வடிக்கைகளை கண்டித்து சிஐடியு சார்பில் விருத்தாசலத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மின்வாரியத்தில் உள்ள துணை மின் நிலையங்களில் வேலை பளு ஒப்பந்தத்தின் அடிப்படையில் அனுமதிக்கப்பட்ட பதவிகளை தொழிற்சங்கங்களுடன் பேசாமல் தன்னிச்சையாக ரத்து செய்து மின்வாரியம் உத்தரவு வழங்கியுள்ளதை கண்டித்தும், மின்வாரியத்தை மூன்றாகப் பிரித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளதை கண்டித்தும், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் விருத்தாசலத்தில் செவ்வாயன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோட்டத் தலைவர் எம். ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாநில துணைப் பொதுச் செயலாளர் டி.பழனிவேல், சிஐடியு மாநிலக் குழு உறுப்பினர் என்.ஆர்.ஆர். ஜீவானந்தம், மின்வாரிய கோட்ட செயலாளர் ஆர்.ஆறுமுகம், துணைத் தலைவர் ஏ.புதுராஜன், இணை செயலாளர் எம். சிவராஜ், செயற்குழு உறுப்பினர் ஆர்.கலைச்செல்வன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.