ராணிப்பேட்டை, டிச 22 - ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் தேர்வு நிலைப் பேரூராட்சியை கடந்த நவம்பர் மாதம் 1ஆம் தேதி நகராட்சியாக தரம் உயர்த்தி தமிழக அரசு ஆணை பிறப்பித்தது இதனை தொடர்ந்து நகராட்சி வார்டுகள் எல்லை வரையறை, எண்ணிக்கை குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது . இந்தக் கருத்துக் கேட்புக் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். பேரூராட்சியில் 18 வார்டு இருந்தது, 27 வார்டுகள் கொண்ட நகராட்சி யாக சீரமைப்பது குறித்து கருத்து மற்றும் ஆலோசனை கேட்கப்பட்டது. இதில் சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்கு தினக்கூலி செய்துவருகின்றனர். எனவே நகராட்சியில் விதிக்கப்படும் அனைத்து வரிகளும் பொதுமக்கள் பாதிக்காத வகையில் குறைவாக வேண்டும், சில வார்டுகளில் மறுவரையறை செய்ய வேண்டும் என ஆலோசனை கூட்டத்தில் கருத்துக்களை தெரிவித்தனர். இக்கூட்டத்தில் நகராட்சி நிர்வாக வேலூர் மண்டல இயக்குநர் குபேந்திரன், சோளிங்கர் நகராட்சி ஆணையர் பரந்தாமன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மரியம்ரெஜினா, வட்டாட்சியர் வெற்றி குமார், நகராட்சி துப்புரவு ஆய்வாளர் வடிவேலு, இளநிலை உதவியாளர் எபினேசர், அனைத்து கட்சி முக்கிய பிரமுகர்கள், குடியிருப்போர் நலச் சங்க உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.