சென்னை, டிச. 22 - வாரிய குடியிருப்புகளை புதுப்பித்து தரும்போது, பயனாளிகளிடமிருந்து 1.50 லட்சம் ரூபாய் வசூலிக்க பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த தகவலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களிடம், முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர் த.உதயச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை நகரில் பல பகுதிகளில் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளை புதுப்பித்து கட்டிக் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த வீடுகளை பெறும் பயனாளிகளிடம் 1.50 லட்சம் ரூபாய் வசூலிக்க கடந்த அதிமுக ஆட்சியில் அரசாணை வெளியிடப்பட்டது. இதை ரத்து செய்யக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர் போராட்டங்கள் நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக முதலமைச்சரின் முதன்மை செயலாளர் த.உதயசந்திரனிடம், கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ், மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஜி.செல்வா ஆகியோர் மனு அளித்தனர்.
அதனைப் பெற்றுக் கொண்ட அவர், அதிமுக ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை, ஏழை எளிய மக்களின் நலன் கருதி ரத்து செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார். 191 குடும்பங்களை கே.பி.பார்க்-இல் குடிமயர்த்துக சென்னை மாநகராட்சி 59வது வட்டத்திற்கு உட்பட்ட காந்திநகர், சத்தியவாணிமுத்து நகர் பகுதியில் இருந்த குடிசைகள் அதிமுக ஆட்சியில் இடிக்கப்பட்டன. இதனால் 191 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் 11 மாதங்களாக கரையோரம் குடியிருந்து வருகின்றனர். இவர்களுக்கு கேசவ பிள்ளை பூங்கா (கே.பி.பார்க்) 2ஆவது திட்டப் பகுதியில் குடியிருப்புகளை ஒதுக்க கோரி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது.
கடந்த மாதம் பெய்த கனமழையின் போது இந்த பகுதிக்கு வந்த நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, அறநிலையத் துறை அமைச்சரும், துறைமுகம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான பி.கே.சேகர்பாபு ஆகியோர் மக்களை சந்தித்து பேசினர். மழைக்காலம் முடிந்தவுடன் கே.பி.பார்க் குடியிருப்புகளை ஒதுக்குவதாகவும் உறுதி அளித்தனர். அதன்படி, கே.பி.பார்க்கில் வீடுகளை ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற மனுவையும் தலைவர்கள் அளித்தனர். இதனை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று, நடவடிக்கை எடுப்பதாக த.உதயசந்திரன் தெரிவித்துள்ளார்.
சிங்காரம் பள்ளி விவகாரம் வில்லிவாக்கம் சிங்காரம் பிள்ளை அரசினர் உதவிபெறும் பள்ளி கட்டிடங்களை, சட்டவிரோதமாக இடித்து வணிக பயன்பாட்டிற்கு கொண்டு சென்றுள்ளனர். இதன்மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி இரண்டு ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடி வருகிறது. இது தொடர்பாக 29.12.2020, 15.06.2021 என இரண்டு முறை மாநகராட்சி ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது. இதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். எனவே, அபகரிக்கப்பட்ட பள்ளி இடத்தில் உள்ள கட்டிடங்களுக்கு சீல் வைக்க வேண்டும். பள்ளி இடத்தை விற்பனை செய்தவர்கள், அபகரித்தவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் த.உதயசந்திரனின் அளிக்கப்பட்ட மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.