சிதம்பரம், ஜூலை 2-
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நான் முதல்வன் உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்பு வழிகாட்டு நிகழ்ச்சி ஞாயிறன்று (ஜூலை 2) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக வேளாண்மை மற்றும் உழவன் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து மாணவர்களிடம் பேசினார்.
அப்போது அவர் தமிழக முதல்வரால் கடந்த ஆண்டு மார்ச் 1ஆம் தேதி இந்த நான் முதல்வன் உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இது கடலூர் மாவட்டத்தில் உள்ள 146 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மிகச் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்காகத் தனி அட்டவணையோடு வகுப்பு கள் நடைபெறுவதால் உயர் கல்விக்கான வாய்ப்புகளையும் வேலை வாய்ப்பு பெறுவதற்கான திறன்களையும் ஆசிரி யர்கள் மாணவர்களுக்கு எடுத்துரைத்து வருகின்றனர் என்று கூறினார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் புதுமைப் பெண் திட்டக் கையேடு மற்றும் உயர்கல்வி வழிகாட்டிக் கையேட்டினையும் மாணவியர்களுக்கு வழங்கினார். இதில் மாவட்ட வன அலுவலர் சுரேஷ் சோமன், உதவி ஆட்சியர் சுவேதா சுமன், அண்ணாமலை பல்கலைக்கழக துணை வேந்தர் கதிரேசன், பல்கலைக்கழக பதிவாளர் சிங்காரவேல் மற்றும் அரசு அலுவலர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.