கிருஷ்ணா நகரில் மழைநீர் தேங்காமல் இருக்க மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆக்கபூர்வமான திட்டங்களை செயல்படுத்திட வேண்டும். புதுச்சேரிநகரத்தையொட்டி உள்ளது கிருஷ்ணா நகர். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது இந்த நகர். தரிசு நிலங்களாக இருந்த இந்நகரில் புதிய புதிய வீடுகள் படிபடியாக உருவானது. மனைகள் பிரிக்கும் போதே எந்த பகுதியில் பிரதான வாய்கால் வசதிகள் அமைக்க வேண்டும் என்று அப்போது வடிவமைக்கப்பட்டது. 12க்கும் மேற்பட்ட சாலைகள், சாலைகளுக்குள் குறுக்கு தெருக்களோடு 1000 க்கும் மேற்பட்ட கட்டிட வீடுகள் மற்றும் தொகுப்புவீடுகள் புதிதாக அமைந்துள்ளது. முறையான வடிகால்வசதிகள் இல்லாதநிலையில் தான் கிருஷ்ணாநகர் தற்போதுவரை உள்ளது. மழைநீர் மேடான பகுதியின் லாஸ்பேட்டையிலிருந்து வழிந்து வரும் மழைநீரை அப்பகுதியில் உள்ள வெள்ளவாரிவாய்க்காலில் கொண்டு இணைப்பதற்கு போதிய வசதியை ஏற்படுத்தவில்லை. இதனால் எதிர்திசையில் உள்ள கிருஷ்ணாநகரில் உள்ளே புகுந்து விடுகிறது. ஏற்கனவே முறையாக வடிகால்வசதி இல்லாத, தாழ்வான பகுதியான கிருஷ்ணாநகரில் மழைநீர் வீடுகளில் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதேப்போல் அதற்கு அடுத்த நகரான எழில் நகரை தொடர்ந்து கடைசியாக உள்ள ரெயின்போ நகரில் உள்ள பிரதான சாலைகளில் மழைநீரால் ஒவ்வொரு ஆண்டும் அப்பகுதி மக்கள் பாதிப்படைந்து வருகின்றனர்.
கள ஆய்வில் சிபிஎம்
காமராஜர் தொகுதிக்கு உட்பட்ட கிருஷ்ணாநகர், ரெயின்போ நகர், பாலாஜி நகர், மொட்டைத்தோப்பு ஆகிய பகுதிகளில் வசிக்கும் 30ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோரை தொடர் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதுச்சேரி அரசிடம் முன்வைத்துள்ளது. இது குறித்து கட்சியின் புதுச்சேரி உழவர்கரை நகரச் செயலாளர் ஆர்.எம்.ராம்ஜி கூறுகையில்,“ கிருஷ்ணா நகர், பாலாஜி நகர்,ரெயின்போ நகர் பகுதி மக்கள் தொடர்ந்து சந்தித்து வரும் பாதிப்புகளிலிருந்து பாதுகாக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கள ஆய்வு நடத்தியது” என்றார். லாசுப்பேட்டை, கருவடிக்குப்பம், பாரதி நகர் ஆகிய மேடான பகுதிகளில் இருந்து வெள்ளம் போல் ஓடி வரும் மழைநீரை கொண்டு செல்வதற்கு மடுவுபேட்டில் இருந்து பாத்திமா பள்ளி வரை கிழக்கு கடற்கரை சாலையில் இரண்டு பக்கமும் அகண்ட கழிநீர் வாய்க்கால்கள் அமைக்க வேண்டும். அப்படி அமைத்து, பாத்திமா பள்ளி அருகே ஓடும் பெரிய வெள்ளவாரி வாய்க்காலில் இணைக்க வேண்டும்.
ஈ.சி.ஆர் சாலையில் கிருஷ்ணா நகர் அருகே உள்ள மோர் சூப்பர் தனியார் மார்க்கெட் பக்கத்திலேயே பழைய இயற்கை வாய்க்கால் ஒன்று உள்ளது. இது ஈ.சி.ஆர் சாலையில் இருந்து கிருஷ்ணா நகர் 12வது தெரு வழியாக சென்று ஏற்கனவே ஒன்றாவது தெருவழியாக செல்லும் வாய்க்காலோடு இணைக்க வேண்டும். ஆனால், முறையான பராமரிப்பு இல்லாமல் குப்பைகளால் அடைபட்டுள் ளதால் வாய்க்கால் போகும் பாதையில் வீடுகள் கட்டி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதை அகற்றி வடிகால்வசதியை ஏற்படுத்த வேண்டும். அதேப்போல், கிருஷ்ணா நகர் 11வது குறுக்குத் தெருவில் உள்ள குழந்தை ஏசு தேவாலயத்தின் அருகில் கிருஷ்ணா நகருக்கும் ரெயின்போ நகருக்கும் குறுக்கே ஓடும்வாய்க்கால் இரண்டாவது குறுக்குத் தெருவழியாக செல்லும் வாய்க்காலோடு இணைக்கப் படாமல், மழைநீரும் கழிவு நீரும் செல்ல முடியாமல் ஒரு குளம் போல் காட்சியளிக்கிறது. இதனையும் சரிசெய்தால் கிருஷ்ணாநகர், ரெயின்போ நகர்,பாலாஜிநகர் ஆகிய பகுதியில் மழைநீர் தேங்காது என்றும் நான்கு வாய்கால்களை அமைக்க வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இந்த பணிகளை புதுச்சேரி அரசு மேற்கொள்ள வேண்டும். இதற்கான பணிகளை தற்போது துவங்கவில்லை என்றால் மக்களை திரட்டி போராடும் என்றும் ராம்ஜி கூறினார்.
இரா.முருகன்