விழுப்புரம், அக்.30- தலித் இளைஞரை விபத்து ஏற்படுத்தி உயிரை பறித்தவர் மீது வழக்குப் பதிவு செய்யக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவித்த முற்றுகை போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம் வேம்பி கிராமத்தைச் சேர்ந்தவர் எட்டி யான். தலித் இளைஞரான இவர் மீது 5.6.2023 அன்று புதுச்சேரி ராயல் கார்ஸ் உரிமையாளர் மகன் காரை ஏற்றிய விபத்தில் உயிரிழந்தாக கூறப்படுகிறது. ஆனால், சம்பந்தப் பட்ட கஞ்சனூர் காவல் நிலைய ஆய்வாளர் சேகர் விபத்து ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்ய வில்லை. குற்றவாளி மீதும் வழக்குப் பதிவு செய்யாமல் நான்கு மாதங்களாக இழுத்தடித்து வருகிறார். இதை கண்டித்தும், வழக்கு பதிவு செய்து முதல் தகவலறிக்கையை பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு வழங்க வலியுறுத்தியும் கஞ்சனூர் காவல் நிலை யத்தை திங்களன்று (அக்.30) தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. சங்கத்தின் விக்கிரவாண்டி ஒன்றிய தலைவர் டி.அஞ்சாபுலி தலைமை தாங்கி னார். முன்னாள் எம்எல்ஏ ஆர்.ராமமூர்த்தி, கட்சியின் மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் மாவட்டச் செயலாளர் ஆர்டி.முருகன், மாவட்டத் தலைவர் ஆர்.தாண்டவராயன், மாவட்டப் பொருளாளர் பி.சிவராமன ஆகியோர் கலந்து கொண்டனர். சம்பவ இடத்திற்கு வந்த செஞ்சி உட்கோட்ட காவல் துணை காவல் கண்காணிப்பாளர் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, 15 நாட்களுக்குள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதிய ளித்தார். இதனையடுத்து போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்து கலைந்து சென்றனர்.