districts

img

அத்திபட்டில் குண்டும் குழியுமான சாலை

திருவள்ளூர், ஜூலை 3-

    சோழவரம் அருகே சேதமடைந்த சாலையை சீரமைக்க கோரி பள்ளி மாணவர்களுடன் இணைந்து கிராம மக்கள் 200க்கும் மேற்பட்டோர் சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை யொட்டியுள்ள சர்வீஸ் சாலையில் மறியல் நடத்தினர்.

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அடுத்த அத்திப்பேடு கிராமத்தில் பிரதான  சாலைக்கு வரும் ஒன்றிய சாலை சுமார் 10  வருடங்களாக குண்டும் குழியுமாக சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்,  வேலைக்கு செல்பவர்கள், அத்தியாவசிய பணிக்கு செல்லும் பொதுமக்கள் என அனைவரும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் வாகனம்கூட இங்கு வரமுடி யாத சூழ்நிலை உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆவேசமடைந்த அத்திப்பேடு கிராம மக்கள் சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலை யில் திங்களன்று (ஜூன் 3), திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி மாணவர்கள், பெண்கள் என 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். சோழ வரம் காவல்துறை அதிகாரிகள் மற்றும் அரசு  அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

     10ஆண்டுகளாக சேதமடைந்துள்ள சாலையை சீரமைப்பதாக அதிகாரிகள் உத்தரவாதம் தந்தால் மட்டுமே கலைந்து செல்வோம் என கிராம மக்கள் கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொன்னேரி எம்எல்ஏ துரை.சந்திர சேகர், வட்டாட்சியர் செல்வகுமார் ஆகியோர்  சாலை மறியலில் ஈடுபட்ட மக்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சேதமடைந்துள்ள சாலையை இரண்டு மாத  காலத்திற்குள் முறையாக சீரமைத்து தருவ தாக உறுதியளித்ததை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.