யானைகளின் நடமாட்டம் உள்ள பகுதிகளில் பேரூராட்சி நிர்வா கம் குப்பைகளை கொட்டுவதால், அதனை உட்கொள்ளும் யானைகளின் சாணத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகம் இருப்பது தெரியவந்துள்ளது. இது வன உயிரின ஆர்வ லர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள கோவை வன கோட்டத்தில் மொத்தம் ஏழு வனச்சரகங்கள் உள்ளன. இதில் கேரளா, கர்நாடகா மற்றும் தமிழக காடு களை இணைக்கும் முக்கிய வழித்தடமாக உள்ளது. கல்லார்-ஜக்கனாரி பீட் மேட்டுப் பாளையம் மற்றும் சிறுமுகை வனச்சரகங்க ளில் உள்ளடக்கி இருப்பதால் இங்கு காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகம். வலசை காலங்களில் நூற்றுக்கணக்கான யானைகள் இவ்வழியே இடம் பெயர்வது வழக்கம். இப்படி இடம் மாறும் யானைகளில் சில உணவும் நீரும் ஓரிடத்தில் கிடைத்தால் அங்கேயே சில காலம் தங்கி விடுவதும் உண்டு. இவை காட்டு யானை களுக்கே உண்டான இயல்பிற்கு மாறாக இயற்கையான வன தீவனங்களை தவிர்த்து விட்டு விவசாய பயிர்களை உண்டு பழகி விட்ட “கிராப் ரைடர்ஸ்” வகை யானைகள் என வனத் துறையினர் அழைக்கின்றனர். இந்த வகையில் சிறுமுகை பகுதியில் சுமார் இருநூறு ஏக்கர் பரப்பளவில் இயங்கி வந்த பழைய விஸ்கோஸ் ஆலையில் 10க்கும் மேற் பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன. அடர்ந்த காட்டை ஒட்டி பவானி ஆற்றங்கரையோரம் இயங்கி வந்த இந்த ஆலை பல்வேறு கார ணங்களினால் மூடப்பட்டு பல ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில், புதர்மண்டி ஆள் நடமாட்டம் இல்லாத ஆலை வளாகத்தினுள் யானைகள் உள்ளன. இவை பகல் நேரங்களில் ஆலைக் குள் ஓய்வெடுத்துவிட்டு இரவு நேரங்களில் ஆலையின் உடைத்த சுவற்றின் வழியே வெளி யேறி அருகில் கிடைக்கும் உணவுகளை உட் கொள்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் இந்த ஆலைக்குள் முகாமிடும் யானைகளின் எண் ணிக்கை மாறினாலும் அருகிலேயே ஆற்று நீரும் தீவனமும் கிடைப்பதால் எப்போதும் ஒரு யானைக்கூட்டம் இதனுள் இருப்பது வழக்க மாகி விட்டது.
இந்நிலையில், வனப்பகுதியை அருகே உள்ள இந்த ஆலையின் சுற்றுச்சுவரை ஒட்டி பொதுப்பணித்துறையினருக்கு சொந்தமான இடத்தில் சிறுமுகை பேரூராட்சி நிர்வாகம் குப்பை கழிவுகளை கொட்டி வருகிறது. நகரின் மைய பகுதியில் அமைந்துள்ள இவ்விடத்தில் தினசரி டன் கணக்கில் கொட்டபட்டும் பிளாஸ் டிக் கழிவுகள் கொண்ட குப்பைகளால் இப்பகுதி யில் கடுமையான சுகாதார சீர்கேடு ஏற்படுவது டன் இக்குப்பைகளில் இருக்கும் உணவு கழிவு களை உண்ண ஆலைக்குள் இருக்கும் யானை களும் வருகின்றன. உயிர் வாழ நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 150 கிலோ உணவாவது தேவை என்ற நிலையில் உள்ள பேருயிரான யானைகள் தனியாக பிளாஸ்டிக் கழிவுகளை உண்ணாது என்றாலும், குப்பைகள் மத்தியில் உணவு கழிவுகளுடன் கிடக்கும் பிளாஸ்டிக் கவர்கள் போன்றவை இதன் வயிற்றினுள் சென்று விடுகின்றன. இதனால் கடும் பாதிப் பிற்கு உள்ளாகும் யானைகள் உடல் நலம் கெட்டு உயிரிழந்து விடும் என வன உயிரின ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதற்கு சான்றாக குப்பை கொட்டப்பட்டு கிடக்கும் இடத்தின் அருகே கிடக்கும் யானை களின் சாணங்களில் செரிமானம் ஆகாத பிளாஸ் டிக் கழிவுகள் காணப்பட்டன. சிறுமுகை வனச் சரக பகுதியில் மட்டும் கடந்த மூன்றாண்டு களில் பதினைந்திற்கும் மேற்பட்ட யானைகள் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந் துள்ளதாக கூறும் வன ஆர்வலர்கள், இதற்கு வனத்தையொட்டி, யானைகள் நடமாட்டம் உள்ள இடங்களில் தாறுமாறாக கொட்டப்பட்டு வரும் குப்பை கழிவுகளே இதற்கு காரணம் என் கின்றனர். இது குறித்து வனத்துறையினரிடம் கேட்ட போது, “சிறுமுகை பேரூராட்சி நிர்வா கத்திடம் இனி இப்பகுதியில் குப்பைகளை கொட்டக்கூடாது என்றும் ஏற்கனவே கொட்டிய கழிவுகளை அப்புறபடுத்துமாறும் கண்டிப்பு டன் கூறியுள்ளோம், அவர்களும் பிரச்சனை யின் தீவிரத்தை உணர்ந்து இதற்கான பணி யினை துவக்கியுள்ளனர்” என்றனர். சிறுமுகை பேரூராட்சி நிர்வாகத்திடம் கேட்ட போது, “எங்களுக்கு குப்பைகளை கொட்ட வேறு இடமில்லை என்பதால் இதற்கு மாற்று ஏற்பாடுகளை செய்ய முயன்று வருகிறோம்” என்றனர். வன பரவலுக்கும் பல்லுயிர் வளத் திற்கும் காரணமான யானைகள் காக்கப்பட வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.