1 ) சூப்பர் மின்கோளாறு நீக்கிகள்
மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து மின்சாரத்தைப் பெற்று மின் விநியோக நிலையங்களுக்கு அனுப்பவதில் கிரிட்(Grid) எனும் வலைப்பின்னல்கள் முக்கியமானவை.மின்சார ஓட்டத்தில் திடீர் மாற்றங்கள் ஏற்படும்போது மின்துண்டிப்பு கள்(circuit breakers) மூலம்விபத்து ஏற்படாமல் சரி செய்யப்படுகின்றன.இந்த முறையில் இரண்டு பிரச்சினைகள் உள்ளன. ஒன்று திடீர் மின் பாய்ச்சலை உணர்ந்து துண்டிப்பதற்கு எடுத்துக் கொள்ளும் நேரம் அதிகம். எனவே அவை திறன் மிகுந்ததாக இல்லை. இரண்டாவது துண்டிக்கப்பட்ட இணைப்புதானாக சரி செய்து கொள்ளாது. தொழில்நுட்ப வல்லுநர்தான் (manual) அதை இணைக்க வேண்டும். ஆகவே மின்வெட்டு நீண்ட நேரம் இருக்கும். கடந்த பத்தாண்டுகளில் மேலை நாடுகளில் இந்தப் பிரச்சனையை மிகை மின்கடத்திகள் (super conducting fault current limiters-SFCL)மூலம் சரி செய்ய முயற்சிகள் நடந்துள்ளன. இந்தியாவில் கான்பூர் ஐஐடி ஆய்வாளர்கள் இதையே திறன்மிகு கருவியாக (Smart SFCL)மாற்றியுள்ளனர்.
இதிலுள்ள மின்சாரம் கடத்தும் பொருள் இரண்டு நிலைகளில் செயல்படுகிறது. மிகை மின்கடத்தும் நிலையில் சீரோ தடுப்பு (zero resistance)அளவே கொடுத்து மின்சாரத்தை வீணாக்காமல் கடத்துகிறது.அதுவே மின்சார அளவு அதிகமாகும்போதுமிகை தடுப்பு நிலைக்கு மாறி சேதமாகாமல் பாது காக்கிறது. மின்சாரம் சாதாரண அளவுக்கு மாறும்போது மீண்டும் அது தானாகவே மிகை கடத்து நிலைக்கு சென்று விடுகிறது. கான்பூர் ஐஐடி ஆய்வாளர்கள் இந்த மிகை மின்கடத்திகளை சுற்றி உணர்வி களை(sensors) கட்டமைத்துள்ளார்கள்.அவை மிகை மின்கடத்தியுள் பாயும் மின்சாரத்தை அளவிட்டு கண்காணித்து வரைபடமாக்கித் தரும்.மின்சார ஓட்டத்தில் கோளாறு உருவாகும்போதே அதை கண்டுபிடித்து தவிர்ப்பதற்கு இவை உதவும்.மிகை மின்கடத்தியின் வெப்ப நிலைமாற்றத்தையும் தெரிவிக்கும். இறக்குமதி செய்யபப்டும் எஸ்எப்சிஎல் (SFCL) விலை பத்து இலட்சம் ஈரோக்கள். ஐஐடி பேராசரியர் பேனர்ஜியின் குழு தயாரித்துள்ள முன்மாதிரியின் விலை இதில் 50-60% குறைவாக இருக்கும். ஆனல் தொழிற்சாலையில் தயாரிப்பதற்கு இன்னும் பல படிகளை தாண்ட வேண்டும். (இந்து ஆங்கில நாளிதழ் 05.12.2021 சுபஸ்ரீ தேசிகன் அவர்கள் கட்டுரையிலிருந்து)
2 ) அணு ஆற்றல் சிதைவதை தடுக்கும் புதிய முறை
பவுலி விலக்கு (Pauli exclusion principle) என்கிற கோட்பாட்டின்படி சோதனை களின்போது எல்லா அணுக்களும் ஒரே ஆற்றல் (quantum)நிலையில் இருக்க இயலாது. இதனால்அவை ஒளியை எல்லாப் பக்கங்களிலும் சிதறடிக்கும். அவ்வாறு சிதறடிக்கும்போது அவை தங்களுடைய ஆற்றல் நிலையை மாற்றிக்கொள்கின்றன. இப்போது விஞ்ஞானிகள் அணுக்களை மிக நெருக்கமாக வைத்து நிறை சூனிய வெப்பத்திற்கு (absolute zero- -273.15 Celsius, or -459.67 Fahrenheit.) குளிர்விக்கும் போது அவை மிகக் குறைந்த ஆற்றல் நிலைக்கு மாறுவதைக் கண்டறிந்துள்ளார்கள்.இந்த நிலையில் அவற்றால் தங்கள் ஆற்றல் நிலையை மாற்றிக்கொள்ள முடியாத தால்,அவை ஒளியை சிதறடிப்பதில்லை.மாறாக ஒளியை ஊடுருவவிட்டு படிகம்போல் தெளிவாகத் தெரியும். இந்த சோதனைகள் ஒளியையும் அணுக்களையும் கட்டுப்படுத்தும் புதிய முறை களை காட்டியிருக்கின்றன.இது பல வழிகளில் பயன்படலாம் என்கிறார் ஆஸ்திரியப் பேராசிரியர் பீட்டர் சோலர். குறிப்பாக அணுக்கள் தாமாக ஒளியை உமிழ்ந்து அதிக ஆற்றல் நிலையிலிருந்து குறைந்த ஆற்றல் நிலைக்கு செல்கின்றன. இந்த சோதனை யின் மூலம் இத்தகைய சிதைவுகளை தடுக்கலாம் எனத் தெரிகிறது.குவாண்டம் கணினி யில் குவாண்டம் தரவுகளை நீண்ட காலம் சேமிக்க உதவலாம் என்கிறார் அவர்.ஆனால் இது கோட்பாட்டு அளவிலேயே உள்ளது என்றும் எவ்வளவு நடைமுறை சாத்தியம் என்பது எதிர்காலத்தில்தான் தெரியும் என்கிறார்.
3 )பூமிக்கடியில் பூஞ்சைக் காளான்கள்
முதன்முதலாக பூமிக்கடியில் உள்ள மாபெரும் பூஞ்சைக் காளான் வலைப் பின்னல்களை கணக்கீடு செய்ய விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.உலகம் முழுவதிலும் அடுத்த பத்து மாதங்களுக்குள் 10000மாதிரிகளை சேகரிக்க உள்ளதாக ‘பூமிக்கடியிலுள்ள வலைப் பின்னல்கள் பாது காப்புக் கழகம்’ கூறுகிறது. இத்தகைய உயிரிகள் அருகி வரும் இடங்களைக் கண்டறிந்து பூமிக்கடியிலுள்ள பல்லு யிர் சூழல் பாதுகாப்பை மேம்படுத்த பணிகளை மேற கொள்ளப் போவதாகவும் அது கூறியுள்ளது.
4 ) கார்பன் உமிழ்வு குறைவான புதிய பிளாஸ்டிக்
சீன விஞ்ஞானிகள் சாலமன் எனும் மீனின் விந்தணுக்களிலிருந்து சுற்று சூழலுக்கு உகந்த பிளாஸ்டிக்கை தயாரித்துள்ளனர். இதிலிருந்து கப்புகள்,புதிர் விளையாட்டு துண்டுகள் போன்றவை உண்டாக்கலாம்.தாவர எண்ணெயிலுள்ள ஒரு வேதிப்பொருளைக் கொண்டு சாலமன் விந்தணுவிலுள்ள இரண்டு டிஎன்ஏ(DNA) படிகளை இணைத்து இந்தப் பிளாஸ்டிக்கை உண்டாக்கியுள்ளனர். இது சாதாரண பிளாஸ்டிக்கை விட 97%குறைவாக கார்பன் உமிழ்வைக் கொண்டது என்கிறார்கள் அந்த ஆய்வாளர்கள்.
5 ) தவளை ரோபோக்கள்
2020ஆம் ஆண்டு அமெரிக்க அறிவியலாளர்கள் செனோபாட்ஸ் எனும் ரோபோக் களை வடிவமைத்தனர். ஆப்பிரிக்க தவளையினத்தின் ஸ்டெம் செல்களிலிருந்து உருவாக்கப்பட்ட இவை ஒரு மில்லிமீட்டருக்கும் குறைவான அளவே உள்ளவை. இவை அங்குமிங்கும் இயங்குவதுடன் குழுவாக பணி செய்யவல்லதும் தன்னைத் தானே குணப்படுத்துக்கொள்ளக் கூடியதும் ஆகும்.இவற்றை வாழும் ரோபோக்கள் என்கிறார்கள். இப்போது இவை இனவிருத்தியும் செய்துள்ளன. இவை மருத்துவ உலகில் பயனுள்ளவையாக இருக்கும் என்கிறார்கள். இது தொடர்பாக டஃப்ட்ஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர் மைகேல் லெவின் ‘தவளைகள் சாதாரண முறையில் இனப்பெருக்கம் செய்யும். ஆனால் அவற்றின் உடலிலிருந்து செல்களை விடுவித்தபின் புதிய முறையில் இனப்பெருக்கம் செய்யும் முறையை கண்டுபிடிக்கும்.’ என்கிறார். அவர் மேலும் கூறுகிறார்’இந்த ரோபோக்கள் மிகச்சிறியது; மக்கும் தன்மையுடயது;உயிர்சூழலுக்கு இணக்கமா னது. இவை நன்னீரில் நன்கு இயங்குகின்றன. நீர் வழிகளில் நுண் பிளாஸ்டிக்கு களை சேகரிப்பது இதன் உடனடிப் பயன்பாடாக இருக்கலாம்.’ இந்த ஆய்வு PNAS எனும் அறிவியல் இதழில் வெளிவந்துள்ளது.