கோவை, டிச. 24 – இரண்டு மாத காலமாக ஊதியம் வழங்காமல் இழுத்தடிக்கும் என்டிசி பஞ்சாலை நிர்வாகத்தை கண்டித்து கோவையில் இன்று தொழிலாளர்கள், தொழிற்சங்க தலைவர்கள் என்டிசி ஆலைகள் மற்றும் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஒன்றிய அரசின் தேசிய பஞ்சாலை கழகமான என்.டி.சி சார்பில் நாடு முழுவதும் 23 ஆலைகள் இயங்கி வருகிறது. இதில் தமிழகத்தில் 7 ஆலைகளும், கோவையில் மட்டும் 5 ஆலைகளும் இயங்கி வருகிறது. இந்த ஆலைகள் கடந்த மார்ச் 24ம் தேதி கொரோனா பரவல் காரணமாக அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கம் காரணமாக முழுமையாக அடைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆலைகளை இயக்க என்டிசி நிர்வாகம் முன்வரவில்லை. தொடர்ந்து தொழிற்சங்கத்தின் தலைமையில் தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பஞ்சாலை இயக்காத இந்த காலத்திற்கு அதிகாரிகளுக்கு முழு சம்பளமும், ஊழியர்களுக்கு பாதி சம்பளமும் வழங்கப்பட்டு வந்தது. அதுவும் பல மாதங்கள் குறிப்பிட்ட தேதியில் ஊதியம் வழங்காமல் இழுத்தடித்து வந்த நிலையில் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்திய பிறகு ஊதியம் குறிப்பிட்ட தேதியில் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாக கடந்த 3 மாதங்களாக ஊழியர்களுக்கு பாதி சம்பளமும் வழங்கப்படவில்லை. இதுகுறித்து நிர்வாகத்திடம் தொழிற்சங்க தலைவர்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் என்டிசி நிர்வாகம் மேற்கொள்ளவில்லை. இதனையடுத்து இன்று (வெள்ளிக்கிழமை) கோவையில் உள்ள 5 என்டிசி ஆலைகளையும் தொழிலாளர்கள் முற்றுகையிடும் போராட்டத்தை மேற்கொண்டனர். இதேபோன்று கோவை காட்டூரில் உள்ள என்டிசி தலைமையகத்தை சங்க வித்தியாசமின்றி அனைத்து தொழிற்சங்க தலைவர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.