districts

img

தொழிலாளர் விரோத ஒன்றிய பாஜக அரசுக்கு எதிர்ப்பு

தருமபுரி, ஜுலை 25- தொழிலாளர் விரோத ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும்  சம வேலைக்கு, சம ஊதியம் வழங்க வலியுறுத்தி அனைத்து  தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் பிரச்சார இயக்கம் மற்றும்  சிறப்பு மாநாடு நடைபெற்றது.  தொழிலாளர்களுக்கு விரோதமான நான்கு சட்ட தொகுப்புகளை திரும்பப் பெற வேண்டும். நிரந்தரமான வேலையில் நிரந்தரமற்ற தன்மையில் தொழிலாளர்களை வைத்திருப்பதை கண்டித்தும் சம வேலைக்கு, சம ஊதியம்  வழங்க வேண்டும். குறைந்த பட்ச மாத ஊதியம் ரூ.28 ஆயிரம்  வழங்க வேண்டும் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிரச்சார இயக்கம், தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு செவ்வாயன்று நடைபெற்றது. இந்த பிரச்சாரத்திற்கு, சிஐடியு மாநிலச் செயலாளர் சி. நாகராஜன் தலைமை ஏற்றார். இந்த பிரச்சாரத்தில் மாவட்டச்  செயலாளர் பி.ஜீவா, ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் கே. மணி, மாவட்ட நிர்வாகி மனோகரன், எல்பிஎப் மாவட்டத் தலைவர் அன்புமணி, மாவட்டச் செயலாளர் பன்முக ராஜா,  எச்எம்எஸ் மாநில நிர்வாகி முருகானந்தம், மாவட்டச் செய லாளர் அன்பு, ஐஎன்டியுசி மாநில நிர்வாகி ஏ.வெங்க டாச்சலம், மாவட்டத் தலைவர் சிவலிங்கம், ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் சி.முருகன், மாவட்டக்குழு உறுப்பினர்  சிவராமன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். தருமபுரியில் துவங்கிய பிரச்சாரம் நல்லம்பள்ளி,  நாகர்கூடல், பெரும்பாலை, பென்னாகரம், இண்டூர் ஆகிய  இடங்களில் நடைபெற்றது.  

ஈரோடு

இதேகோரிக்கைகளை வலியுறுத்தி, ஒன்றிய பாஜக அரசின் தொழிலாளர் விரோத, மக்கள் விரோத கொள்கை களை எதிர்த்து அனைத்து தொழிற்சங்கங்கள் கலந்து கொண்ட சிறப்பு மாநாடு ஈரோடு ஏஐடியுசி அலுவலகத்தில் நடைபெற்றது. மாநாட்டிற்கு எல்பிஎப் மாவட்டத் தலைவர் செ.தங்க முத்து தலைமை வகித்தார்.  மாநாட்டில், ஏஐடியுசி மாநிலச் செயலாளர் எஸ்.சின்ன சாமி, சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.சுப்ரமணியன், எச்எம்எஸ் மாவட்டச் செயலாளர் பி.சண்முகம், எல்பிஎப் சே.கோபால், ஐஎன்டியுசி மாவட்டத் தலைவர் என்.துரை சாமி, எம்எல்எப் மாவட்டச் செயலாளர் எஸ்.எஸ்.காளியப்பன்,  ஏஐசிசிடியு மாவட்ட அமைப்பாளர் ஜே.பி.கார்த்திகேயன், டிடிஎஸ்எஸ்எப் மாவட்டத் தலைவர் ஆர்.கலைமுருகன், எல்டியுசி மாவட்டச் செயலாளர் கே.ஆர்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உரையாற்றினார். முன்னதாக, தொழிலாளர் விரோத ஆட்சி நடத்தும் ஒன்றிய  பாஜக அரசை கண்டித்து, ஆகஸ்ட் 9ஆம் தேதியன்று சென்னையில் நடைபெறும் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் பங்கேற்பது எனவும், இந்த ஆர்ப்பாட்டத்தின் நோக்கங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் வித மாக விரிவான பிரச்சார இயக்கத்தை மேற்கொள்வது என  இம்மாநாட்டில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. முடிவில்,  சிஐடியு மாவட்டச் செயலாளர் எச்.ஸ்ரீராம் நன்றி கூறினார்.