districts

img

குடிநீர் பிரச்சனை: காலிக்குடங்களுடன் மக்கள் மறியல்

பொள்ளாச்சி, அக்.3- கோட்டூர் அருகே ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சனையில் அரசு அதிகாரிகள் தலையிட்டு சரி செய்ய வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த கோட்டூர் மங்கமாமில் பகுதிகளிலுள்ள வீடுகளில் ஒரு சிலர் குடிநீரை மோட்டார் வைத்து அதிகமாக உறிஞ்சிக் கொள்கின்றனர். இதனால் மோட்டார் பயன்படுத்தாதவர்களின் வீடுகளிலுள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் சரியாக வருவதில்லை. இதனால் பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதுகுறித்து, அப்பகுதி பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால், ஆவேசமடைந்த அப்பகுதி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோட்டூர் காவல் துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். இதில், பொதுமக்கள் சமாதானம் அடையாததையடுத்து தொடர்ந்து மறியல் போராட்டம் நீடித்தது. இதன்பின் கோட்டூர் பேரூராட்சி தலைவர், அப்பகுதியைச் சேர்ந்த வார்டு உறுப்பினர் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் சமரசம் ஏற்பட்டது.  இதனையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

;