கடந்த 2009 இல் திருப்பூர் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அதன் பிறகு 2011ல் திருப்பூர் மாநகராட்சியுடன் திருப்பூர் தெற்கு பகுதியில் பெரி யாண்டிபாளையம், முருகம் பாளையம், வீரபாண்டி, முத்தணம் பாளையம் ஊராட்சிகளும், நல்லூர் நகராட்சியும் இணைக்கப்பட்டன. இப்பகுதிகளில் பல ஆயிரக் கணக்கான குடியிருப்புகளும், 3 லட்சத்திற்கு மேற்பட்ட மக்களும் வசித்து வருகின்றனர். மாநகராட்சியுடன் இணைக்கப் பட்டால் நமது பகுதிக்கு ரோடு, சாக்கடை மற்றும் அனைத்து வசதி களும் உடனே கிடைத்துவிடும் என்று மக்கள் எதிர்பார்த்தனர். ஆண்டு வரி வருவாய் கிட்டத்தட்ட ரூ.288 கோடி வசூலிக்கப்படுகிறது. ஆனால் இப்பகுதி மக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தினாலும் மாநகராட்சி பாராமுகமாக செயல்படுகிறது.
போதிய குடிநீர், சாக்கடை கால்வாய், பாதாள சாக்கடை திட்டம் என ஏட்டளவில் உள்ளதே தவிர பல பகுதிகளில் தொடங்காமல் உள்ள னர். குண்டும் குழியுமான சாலை மற்றும் சாக்கடை வசதி இல்லாத வீடுகள் முன்பு கழிவுநீர் குளம் போல தேங்கி பல்வேறு நோய் தொற்றுக்கு ஆளாக வேண்டிய ஆபத்தான சூழ்நிலை உள்ளது. சேறும் சகதியுமாக உள்ள சாலையில் நடந்து செல்லக்கூட முடியாமல் மிகவும் சிரமப்பட வேண்டியுள்ளது. சுமார் ரூ.1300 கோடியில் சீர்மிகு நகரம் திட்டத்தில் பல் வேறு பணிகள் நடைபெற்று வரு கின்றன. நகரை அழகுப்படுத்த கோடிக்கணக்கான ரூபாய் செல விடும் மாநகராட்சி நிர்வாகம் நகர மக்களின் அடிப்படை தேவை களுக்கு முயற்சி எடுப்பதில்லை. ஆனால் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் வீட்டுமனை வரன்முறைப்படுத்த கூடுதல் கட்டணம் வசூல் செய்கிறார்கள். சதுர அடிக்கு 65 ரூபாய் என்றால் ஒரு சென்ட் நிலத்திற்கு 28,340 ரூபாய் வருகிறது. அதேபோல் சென்னை, கோவை உள்ளிட்ட மாநகராட்சிகளிலேயே இல்லாத வகையில் குப்பை வரி திருப்பூர் மாநகராட்சியில் தனியாக வசூலித்து மக்களை கசக்கி பிழி கின்றனர். மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதோடு, உயர்த்தப்பட்ட மனை வரன்முறை கட்டணத்தையும், குப்பை வரியையும் ரத்து செய்ய வேண் டும்.
சி.மூர்த்தி (சிபிஎம் தெற்கு ஒன்றியச் செயலாளர்)