கோவை, அக்.3- கோவை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களின் சம்பள உயர்வை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வேலை நிறுத்தம் மற்றும் மாவட்ட ஆட்சியர் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்தனர். ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு ரூ.721 தினசரி ஊதியமாக வழங்க வேண்டும் என்று கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த ஊதிய உயர்வை உடனடியாக வழங்க வேண்டும். காப்பீடு, பிஎப், இஎஸ்ஜ ஆகியவற்றை முறைபடுத்த வேண்டும். 15 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் தூய்மை பணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த பணியாளர்கள் காலவரையற்ற போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இதனிடையே, திங்களன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 500க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை கைது செய்து தனியார் மண்டபத்திற்கு கொண்டு சென்று பின்னர் விடுவித்தனர்.