districts

img

பெண்களை இழிவாக பேசிய அதிகாரிகள் அரசு ஊழியர் சங்கம் போராட்டம்

சேலம், மார்ச் 12- பெண்களை இழிவு செய்யக்கூடிய வகையில் பேசிய  பட்டு வளர்ச்சித் துறை உதவி ஆய்வாளர் மற்றும் நீர்வளத் துறை ஆட்சியாளர் கண்டித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்ட தமிழ்நாடு பட்டு வளர்ச்சித்துறை உதவி  இயக்குனரகத்தில், உதவி ஆய்வாளராக பணிபுரியும் கே.செல்வநாதன் பணி நேரத்தில் மது அருந்திவிட்டு, அங்கு அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களை கண்ணியம் குறைவாக பேசி உள்ளார். இது சம்பந்தமாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர், உதவி இயக்குனர், இணை இயக்குனரிடம் முறையீடு செய்தும், இதுவரை எந்த  நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேபோல, காந்தி ரோடு பகுதியில் செயல்படும் நீர்வளத்துறை கண்காணிப்பு அலுவகத்தில் நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளராக பணியாற்றி வரும் ஜலீல்  குமார், தினமும் அலுவலக நேரத்திலேயே மது அருந்தி விட்டு, குடிபோதையில் அங்கு பணிபுரியும் பெண் ஊழியர்களை தகாத வார்த்தைகளால் திட்டுவது, மிரட்டுவது  போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டு வருகிறார். இது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் மற்றும் முதன்மை பொறி யாளர், தலைமை பொறியாளர்களிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவர்கள் மீது உடனடியாக மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் நா திருவேரங்கன் தலைமை யில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மாவட்டச் செயலாளர் சுரேஷ், மாநில துணைத் தலைவர்  பழனியம்மாள், வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில துணைத் தலைவர் வெ.அர்த்தனாரி, தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் எ.நட ராஜன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.