கோவை, டிச. 24 – ஆட்சி அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள மக்கள் ஒற்றுமையை சீர்குலைக்கும் பாசிச பாஜகவை விரட்டுவோம் என தந்தை பெரியார் நினைவு நாள் உறுதிமொழியை மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் உறுதியேற்றனர்.
தந்தை பெரியாரின் 48 ஆவது நினைவு நாளையொட்டி கோவை புலியகுளத்தில் உள்ள பெரியார் உருவச்சிலைக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் சி.பத்மநாபன் தலைமையில் மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனைத்தொடர்ந்து மக்களிடையே பிரிவினையை உருவாக்கும் பாசிச பாஜகவை நாட்டை விட்டு விரட்டுவோம். மக்கள் ஒற்றுமையை பாதுகாப்போம். தந்தை பெரியார் நினைவு நாளில் மார்க்சிய, அம்பேத்கரிய, பெரியாரிய அமைப்புகள் ஒன்றிணைந்து இந்த சபதத்தை மேற்கொள்வோம் என உறுதியேற்றனர்.
இதேபோன்று தலைமை மின்வாரிய அலுவலகம் முன்பு சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் தந்தை பெரியார் அவர்களின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதேபோல் சித்தாபுதூரில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் தந்தை பெரியார் அவர்களின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியதை செலுத்தினர். கோவை மாவட்டம் முழுவதும் பல்வேறு அமைப்பினர் தந்தை பெரியார் நினைவு தினத்தை அனுசரித்தனர்.