செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் அழிப்பு
செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் அழிப்பு திருப்பூர், மே 15- செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட 1.3 டன் மாம்பழங்களை பறிமுதல் செய்து அழித்து, உணவு பாது காப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி விஜயலலி தாம்பிகை தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் குழுக்களாக சென்று மாவட்டம் முழுவதும் மாம்பழம், தர்பூ சணி, பழங்கள் விற்பனை செய்யும் கடைகள், குடோன் களில் ஆய்வு செய்தனர். செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்ப ழங்கள் தொடர்பாக 102 கடைகளில் ஆய்வு செய்து, 12 கடைகளில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டன. செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட 300 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன. இதன் மதிப்பு ரூ.30 ஆயி ரம் ஆகும். சம்பந்தப்பட்ட கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப் பட்டது. இதற்கு முன்பாக திருப்பூரில் 2.5 டன் மாம்பழங் கள் அழிக்கப்பட்டன. குளிர்பான கடைகள், ஐஸ்கிரீம் கடைகளில் சோதனை நடத்தப்பட்டது. 35 கடைகளில் ஆய்வு செய்து, 5 கடைக ளில் விதிமீறல் கண்டறியப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட் டன. சுகாதாரமற்ற முறையில் பழச்சாறு தயாரித்த 5 கடை களுக்கு தலா ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது. இந்த நிலையில் செவ்வாயன்று 2ஆவது நாளாக உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை தலைமையில் அதிகாரிகள் தென்னம்பாளையத்தில் உள்ள கடைகளில் ஆய்வு செய்தனர். அப்போது செயற்கை முறை யில் பழுக்க வைக்கப்பட்ட ஒரு டன் மாம்பழங்களை பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் இது போன்ற மாம்பழங்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எச்சரிக்கை விடுத்தனர்.
குடிபோதையில் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்: ஒருவர் உயிரிழப்பு
குடிபோதையில் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்: ஒருவர் உயிரிழப்பு கோவை, மே 15- கோவை காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து மோதியதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். கோவை காந்திபுரம் நகரப் பேருந்து நிலையம் எப்பொழு தும் பரபரப்பாக காணப்படும் கோவை நகரின் மையப் பகுதி யில் முக்கியமான பேருந்து நிலையங்களில் ஒன்று. இந்த பேருந்து நிலையத்தில் இருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் புதனன்று காலை தனியார் பேருந்து ஒன்று பேருந்து நிலையத்திற்குள் வந்த நிலையில், வாகனத்தை பின்னோக்கி இயக்கியதில் இரண்டு பேருந்திற்கு நடுவில் சிக்கி, பயணி ஒருவர் மீது மோதி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் சக பயணிகள் கூச்சலிட்டு அலறி அடித்து ஓடினார் கள். உடனடியாக அங்கு இருந்த சக பேருந்து ஊழியர்கள் வாக னத்தை நிறுத்தி ஓட்டுநரை கீழே இறக்கியதில், விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் குடி போதையில் இருந்தது தெரியவந் தது. இதையடுத்து அந்த ஓட்டுநரை சரமாரியாக தாக்கி போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்தவரின் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் கோவை ஒண்டிப்புதூரைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்றும், விபத்தில் பலியானவர் சிவக்குமார் என்பதும் தெரியவந்தது.
பகல் நேரத்தில் சுற்றித்திரியும் காட்டு யானை
பகல் நேரத்தில் சுற்றித்திரியும் காட்டு யானை ஈரோடு, மே 15- ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் பல்வேறு வகையான காட்டு விலங்குகள் உள்ளன. இந்நிலையில், வனப்பகுதியில் கடுமையான வறட்சி காரணமாக வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறுவது அதிகரித்துள்ளது. இதற்கிடையே, சத்திய மங்கலம் வனச்சரகத்திற்கு உட்பட்ட கொண்டப்பநா யக்கன்பாளையம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை ஆண் காட்டுயானை பெரும்பள்ளம் அணை அருகே உள்ள தரிசு நிலங்களில், பகல் நேரங்களில் நடமாடுகிறது. மேலும், அந்த ஆண் யானைக்கு உடல்நலம் குன்றியதால் உணவு எதுவும் உட்கொள்ளாமல் சுற்றித்திரிவதாக அப்ப குதி விவசாயிகள் மற்றும் கால்நடைகளை மேய்ப்பவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சத்தியமங்கலம் வனச்சரக அலுவலர் பழனிச்சாமி கூறுகையில், பெரும்பள்ளம் அணை பகுதி யில் நடமாடும் காட்டுயானையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அந்த யானை தண்ணீர் குடிப்பதற்காக பெரும்பள்ளம் அணைக்கு பகல் நேரத்தில் வருகிறது. யானை யின் உடல்நிலை நன்றாக இருக்கிறது, என்றார்.
மேட்டூர் அணையில் செத்து மிதந்த மீன்கள்!
சேலம், மே 15- மேட்டூர் அணை நீர்மட்டம் 50 அடியாக சரிந்துள்ள நிலையில், இறந்து கரை ஒதுங்கிய மீன்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் அணையில் வளர்க்கக்கூடிய மீன்களை 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள், உரிமம் பெற்று மீன்களை பிடித்து விற் பனை செய்து வருகின்றனர். இந்நிலை யில், மேட்டூர் அணையில் ஏராளமான மீன்கள் செத்து மிதக்கக்கூடிய காட்சிகள் பரப ரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதி மக்கள் மற்றும் மீனவர்கள் பரிசல் மூலமாக அள்ளிச் செல்கின்றனர். மேட்டூர் அணை நீர்மட்டம் 50 அடியாக சரிந்திருக்கக்கூடிய நிலையில், சிறிய வகை மீன்கள் செத்து கரை ஒதுங்கியது. 1 கிலோ முதல் 10 கிலோ வரை கெளுத்தி, வாலை மீன்கள் மயங்கி கிடைக்கக்கூடிய நிலையிலும் மீனவர்கள் மீன்களை எடுத்து செல்கின்றனர். இதுகு றித்து மீன்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், மேட்டூர் அணையில் ரசாயன கழிவு கலப்பதன் காரணமாக மீன்கள் செத்து மிதக்கின்றனவா? அல்லது ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக சுவாச கோளாறு ஏற்பட்டு மீன்கள் செத்து மிதக்கின்றனவா? என்பது தெரியவில்லை. நீரின் மாதிரி களையும், செத்து மிதந்த மீன்களையும் ஆய்வுக்காக நாங்கள் எடுத்து சென்றிருக்கி றோம். ஆய்வின் முடிவின் அடிப்படையில் அதுகுறித்ததான தகவல்கள் தெரியவரும், என்றனர்.
வளர்ச்சித்திட்டப் பணிகள் குறித்து ஆய்வு
வளர்ச்சித்திட்டப் பணிகள் குறித்து ஆய்வு தருமபுரி, மே 15- ரூ.1.80 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகள் குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி செவ் வாயன்று ஆய்வு மேற்கொண்டார். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள பருவ தனஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட குறுந்தோப்பு கிராமத்தில் ரூ.11.92 லட்சம் மதிப்பில் குளம் அமைப்பதற்காகத் தேர்வு செய்யப்பட்ட இடத்தைப் பார்வையிட்ட ஆட்சியர் கி.சாந்தி, அஞ்சேஅள்ளி ஊராட்சி, சி.ரங்காபுரம் கிராமத்தில் மரக்கன்று நடும் பணிகளைத் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து ஏரியூர் பேருந்து நிலையத்தில் தூய்மைப்பணி உள்ளிட்ட அடிப்படை வசதிகள், ஏமனூர் ஊராட்சியில் ரூ.19 லட்சம் மதிப் பீட்டில் சமுதாய கிணறு அமையவுள்ள இடம், ஏரியூரில் ரூ.59 லட்சம் மதிப்பீட்டில் வட்டார சுகாதார மைய கட்டட கட்டுமானப் பணிகள், தேல்கல்காடு ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள குளம் என மொத்தம் ரூ.1.80 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து ஆட்சியர் கி.சாந்தி நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது பென்னாகரம் வட்டாட்சி யர் சுகுமார், தருமபுரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சத்யா, ரங்கநாதன், தருமபுரி உதவி செயற்பொறியாளர் துரைசாமி, பென்னாகரம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தொட்டபெட்டா செல்ல தடை விதிப்பு
உதகை, மே 15– தொட்டபெட்டா சாலையில் சோதனைச் சாவடி மாற்றி அமைக்கும் பணியையொட்டி, சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக் கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள தொட்டபெட்டா மலை சிகரத்தை காண சுற்று லாப் பயணிகள் அதிகளவில் வருகை தரு கின்றனர். தற்போது, கோடை சீசன் என்ப தால், கடந்த மே 10 ஆம் தேதியன்று முதல் 14 ஆம் தேதி வரை, 45 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். இந்நிலையில், தொட்டபெட்டா சந்திப்பில் வனத்துறை சார் பில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள் ளது. இந்த சோதனைச்சாவடியால் பிரதான சாலையில் செல்லும் வாகனங்கள் அடிக்கடி போக்குவரத்து நெரிசலில் ஏற்படுகிறது, இதை தவிர்க்க சோதனைச்சாவடியை மாற்றி அமைக்க வனத்துறை நடவடிக்கை எடுத்தது. அதற்கான பணிகள் நடைபெற்று வருவதால், வியாழனன்று (இன்று) முதல் மே 22 ஆம் தேதியன்று வரை தொட்ட பெட்டா சிகரம் செல்ல சுற்றுலாப் பயணிக ளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மின்னல் தாக்கியதில் 2 பேர் உயிரிழப்பு
தருமபுரி, மே 15- மொரப்பூர் அருகே மின்னல் தாக்கிய தில் பெண் உட்பட 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம், மொரப்பூரை அடுத்த நவலை கிராமத்தைச் சோ்ந்தவர் அருணா சலம் மகன்- முனியப்பன் (45). இவர் திருப் பத்தூரில் ரயில்வே பாதுகாப்புப்படையில் காவலராகப் பணிபுரிந்து வந்தார். இந்நிலை யில், செவ்வாயன்று பிற்பகலில் மொரப்பூர் வட்டாரப் பகுதியில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்துள்ளது. முனியப்பன் தனது வீட் டின் மேற்கூரை பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த நிலையில், எதிர்பாராத வித மாக அவர் மீது மின்னல் பாய்ந்ததில் சம்பவ இடத்தில் முனியப்பன் உயிரிழந்தார். அதே போல மொரப்பூரை அடுத்த நைனாகவுண் டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மனோ கரன் என்பவரின் மனைவி சித்ரா (50). இவர் தமது வீட்டின் வெளியே கால்நடைகளை மேய்ச்சலுக்கு கட்டும் பணியில் ஈடுபட்ட போது, மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து மொரப் பூர் காவல் துறையினர் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். ஒரே நாளில் மின்னல் தாக்கி 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி யில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பந்தலூர் சாலையில் வழிந்தோடும் மழைநீர்
உதகை, மே 15- பந்தலூர் நெடுஞ்சாலையில் தேங்கி நிற் கும் மழைநீரால், வாகன ஓட்டிகள் கடும் அவ திக்குள்ளாகி வருகின்றனர். நீலகிரி மாவட்டம், பந்தலூர் பஜார், வரு வாய் ஆய்வாளர் அலுவகம் அருகே நெடுஞ் சாலையின் குறுக்கே இருந்து வந்த கழிவு நீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் மற்றும் மழைநீர் தேங்கி நிண்று வந்தது. மேலும், மழைக்காலங்களில் மழைநீர் கடைக ளுக்குள் புகுந்து பாதிப்புகள் ஏற்பட்டு வந் தது. இதையடுத்து பொதுமக்களின் கோரிக் கையை ஏற்று, நெடுஞ்சாலைத்துறை சார்பில் நிதி ஒதுக்கீடு செய்து கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி கடந்த சில நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வந்தது. இப்பணிகள் நிறைவு பெற்ற நிலையில், ஞாயிறன்று பந்த லூரில் பெய்த மழையால் மழைநீர் செல்ல முடியாமல் சாலையில் தேங்கி நின்றது. இத னால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள், வியா பாரிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். ஆக்கிரமிப்பை முறையாக அகற்றி மழைநீர் வழிந்தோடும் வசதிகளை முறையாக செய் யாததால் மீண்டும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் குற்றச்சாட்டியுள்ளனர். எனவே, நெடுஞ்சாலையில் மழைநீர் தேங்கி நிற்காமல், கால்வாயில் வழிந்தோடும் வித மாக பணிகளை மேற்கொள்ள வேண்டும் என வியாபாரிகள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கனமழை பெய்யும் வாய்ப்பு அதிகம்
நாமக்கல், மே 15- நாமக்கல் மாவட்டத்தில் வரும் நாட்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத் துவக்கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடந்த வார வானிலையைப் பொருத்தமட்டில், பகல் வெப்பம் 103.1 டிகிரி பாரன்ஹீட்டாகவும், இரவு வெப்பம் 69.8 டிகிரி பாரன்ஹீட்டா கவும் காணப்பட்டது. ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தது. இனிவரும் நாட்க ளில், வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். மாவட்டத்தில் சில இடங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள் ளன. வெயிலின் தாக்கம் குறைவாகவே இருக் கும். பகல் வெப்பம் 98.6 டிகிரி பாரன் ஹீட்டாகவும், இரவு வெப்பம் 69.8 டிகிரி பாரன்ஹீட்டாகவும் காணப்படும். தென் மேற்கு, கிழக்கு ஆகிய திசைகளில் இருந்து மணிக்கு 12 கி.மீ. வேகத்தில் காற்று வீசக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.