ஈரோடு, மார்ச் 14- வனத்துறை நிலத்தை விவசாய பயன்பாட்டுக்கு விடக் கோரி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வாராந்திர குறைதீர்க்கும் கூட்டம் ஈரோடு மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ண னுண்ணி தலைமையில் திங்களன்று நடைபெற்றது. இதில் 213 மனுக்கள் வரப்பெற்றது. இதில், அந்தியூர் வட்டம், மாத்தூர் கிராமத்தில் வருவாய்த்துறைக்கு சொந்தமான 685 ஏக்கர் ஒதுக்குக் காடுகள் உள்ளது. இந்த நிலம் தற்போது வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. எந்தவித பயன்பாடும் இன்றி உள்ள அந்த நிலத்தை எங்கள் சங்க உறுப்பினர்களுக்கு விவசாய பயன்பாட்டுக்கு வழங்க வேண்டும் என அந்தியூர் அனைத்து மக்கள் முன்னேற்ற நலச் சங்கத்தினர் மனு அளித்தனர். அருந்ததிய மக்களுக்கு மிரட்டல் ஈரோடு நேதாஜி சாலை, ஆலமரத்து தெருவில் கடந்த 80 ஆண்டுகளுக்கு மேலாக தாழ்த்தப்பட்ட ஏழை அருந்ததிய மக்கள் வசித்து வருகின்றனர். அந்த இடத்துக்கு இதுவரை பட்டா பெறப்படவில்லை. இந்நிலையில், அந்த இடம் குடிசை மாற்று வாரியத்திற்கு சொந்தமானது எனவும், பல லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் சிலர் மிரட்டுகின்றனர். எனவே, அப்பாவி மக்களை மிரட்டுவதைக் கைவிட்டு பட்டா வழங்க வேண்டும் என மனு கொடுத்தனர். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.சந்தோஷினி சந்திரா மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.