districts

img

கோவை: ஓடையில் செத்து மீன்கள் - மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு!

கோவை மதுக்கரை மஞ்சப்பள்ளம் ஓடை  நீரில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்த நிலையில் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஓடையில் ஆய்வு மேற்கொண்டனர்.  

கோவை அறிவொளி நகர்ப் பகுதியிலிருந்து மதுக்கரை, நாச்சிபாளையம், வழியாகக் கேரளா செல்லும் மஞ்சப்பள்ளம் ஓடை அமைந்துள்ளது.  இதில் மழைக்காலங்களில் சுகுணாபுரம்,  சுந்தராபுரம், ஈச்சனாரி, மதுக்கரை சுற்று வட்டார பகுதிகளிலிருந்து வரும் மழை நீர், ஓடையில் கலந்து செல்கிறது.

மேலும் இந்த ஓடைப் பாதையில் ஆங்காங்கே உள்ள பள்ளங்களில் நீர் தேங்கியிருப்பதால் கோடைக் காலத்திலும் முக்கிய நிலத்தடி நீர் ஆதாரமாகவும் உள்ளது. மேலும் இந்த நீரை விவசாயத்திற்கும், கால்நடைகளுக்கும் விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். நிலத்தடி நீருக்காக குரும்பபாளையம் அருகே தடுப்பணை ஒன்றும் கட்டப்பட்டுள்ளது. 

இந்நிலையில் மதுக்கரை குரும்பபாளையம் அருகே செல்லும் ஓடைப்  பாதை பள்ளத்தில் தேங்கி இருந்த நீரில்  ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தது. அப்பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் தொழிற்சாலையிலிருந்து வெளியேற்றப்படும்  கழிவுநீர், இப்பள்ளத்தில் கலப்பதால் நீர் மாசு ஏற்பட்டு மீன்கள் இறந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்த நிலையில் மாசுக் கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டு ஓடை நீரை ஆய்விற்காக எடுத்துச் சென்றனர். மேலும்  தனியார் தொழிற்சாலையிலும் மாதிரிகளை எடுத்துச் சென்றனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும் போது, விவசாயம் மற்றும் கால்நடை பயன்பாட்டிற்கான ஓடையில் தனியார் நிறுவன இரசாயன கழிவு நீர் கலந்ததே காரணம் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.

;