தேள் கொட்டியதில் குழந்தை பலி
உத்திரமேரூர், மார்ச் 24- காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரை அடுத்த சங்கராபுரம் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன் என்பவரின் மகன் லட்சிய கண்ணன் (வயது 3) தேள் கொட்டி உயிரிழந்தது. கடந்த 20-ந்தேதி இரவு வீட்டில் குழந்தை கண்ணன் விளையாடிக் கொண்டி ருந்தபோது திடீரென அழுது துடித்தது. குழந்தையின் அருகில் சென்று பார்த்த போது தேள் கொட்டியது தெரிந்தது. உடனே மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் செவ்வாயன்று இரவு லட்சிய கண்ணன் பரிதாபமாக இறந்து போனான்.
நடிகர் சங்க அறங்காவலர்கள் நியமனம்
சென்னை,மார்ச் 24- தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வாக்கு எண்ணிக்கை கடந்த ஞாயிறன்று நடைபெற்று, அனைத்து பதவி களையும் விஷால் தலைமையிலான பாண்டவர் அணி கைப்பற்றியது. இந்நிலையில் நடிகர் சங்க அறங்காவலர்களாக 9 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். நிர்வாக குழுவில் இருந்து நாசர், விஷால், கார்த்தி ஆகியோரும், பொதுக்குழுவில் இருந்து கமல்ஹாசன், பூச்சி முருகன், சச்சு ஆகியோரும், செயற்குழு வில் இருந்து ராஜேஷ், லதா சேதுபதி, கோவை சரளா ஆகியோரும் அறங்காவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அம்பத்தூர் பகுதியில் இன்று குடிநீர் விநியோகம் நிறுத்தம்
சென்னை,மார்ச்.24- அம்பத்தூரில் 7 வட்டங்களில் வெள்ளியன்று (மார்ச் 25) குடிநீர் விநியோகம் பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்படும் என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட அறிக்கை: சென்னை குடிநீர் வாரியத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் நெற்குன்றம் குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ் 500 மி.மீ. விட்டமுள்ள குடிநீர் குழாயினை பூந்தமல்லி நெடுஞ்சாலை யில் அமைந்துள்ள 1900 மி.மீ. விட்டமுள்ள பிரதான குழாயுடன் இணைக்கும் பணிகள் வெள்ளியன்று காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால், நெற்குன்றம் வி.ஜி.பி. அமுதா மெயின் ரோட்டில் உள்ள வால்வு மூடப்பட உள்ளது. எனவே, அம்பத்தூர் வார்டு எண் 87 முதல் 93 வரை உள்ள 7 பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதனால், பொது மக்கள் முன்னெச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படு கிறார்கள். மேலும், அவசர தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள பகுதி பொறியாளரின் 8144930907 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மாதவிடாய் மேலாண்மை 2வது உச்சி மாநாடு
செங்கல்பட்டு, மார்ச் 24 – காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் பொது சுகாதார பள்ளியில் மாதவிடாய் மேலாண்மை குறித்த 2 ஆவது உச்சி மாநாடு சமீபத்தில் நடைபெற்றது. இம்மாநாட்டில் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த அரசு அலுவலர்கள், அரசு சாரா அமைப்புகள், மாத விடாய் மேலாண்மை தூதுவர்கள் என 160 க்கும் மேற்பட்ட வர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டின் நோக்கம் பற்றி கிராமலயா நிறுவனர் எஸ்.தாமோதரன் பேசினார். வெளிவிவகார துறை அமைச்சகத்தின் இயக்குநர் ரவி பட்னாகர், தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப் துறை இயக்குநர் மருத்துவர் செல்வ விநாயகம் மிஸ் இந்தியா பட்டம் வென்ற சினேகா ஷெர்கில் ஆகியோர் கருத்துரை வழங்கினர். விருதுகள் பள்ளிகள், பணிபுரியும் இடங்களில், சுகாதார மையங்க ளில் தனி கழிப்பிடங்கள், தனி அறைகள், தண்ணீர் வசதி, பயன்படுத்திய நாப்கின்களை சுகாதாரமாக அப்புறப் படுத்துதல் ஆகியவை அமைப்பது குறித்து 15 சிறந்த ஆலோச னைகள் பரிந்துரைகள் வழங்குபவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளதாகவும் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: யோகா ஆசிரியர் கைது
சென்னை, மார்ச் 24- கோடம்பாக்கம் யுனைடெட் இந்தியா காலனி முதலாவது பிரதான தெருவைச் சேர்ந்தவர் சந்தானம் (57). யோகா ஆசிரியரான இவர், சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் உள்ள பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக யோகா கற்று கொடுத்து வந்தார். இந்நிலையில் சந்தானம், கடந்த 12ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை வண்ணாரப்பேட்டை திருவொற்றியூர் நெடு ஞ்சாலையில் உள்ள மாநகராட்சிப் பள்ளி மாணவிகளுக்கு யோகா கற்றுக் கொடுத்தார். அப்போது அந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்ற மாணவிகளுக்கு சந்தானம் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதில் பாதிக்கப்பட்ட சில மாணவிகள், குழந்தைகள் நல வாரியத்தில் புகார் அளிதனர். இதையடுத்து குழந்தைகள் நல வாரிய குழு உறுப்பினர் ந.லலிதா, வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் துறையினர் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் சந்தானம் மீது வழக்குப் பதிவு செய்து, அவரை வியாழனன்று (மார்ச் 24) கைது செய்தனர்.