கள்ளக்குறிச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23வது மாநாடு எழுச்சியுடன் துவங்கியது.
கள்ளக்குறிச்சி - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23ஆவது மாநாடு சங்கராபுரம் நகரில் செந்தொண்டர்களின் மிடுக்கான அணிவகுப்புடனும், கொட்டும் பறைகளின் கம்பீர ஓசையுடன் நகரம் முழுவதும் செம்பதாகைகள் கட்டப்பட்டு எழுச்சியுடன் துவங்கியது. பேருந்து நிலையம் அருகே கலைக் குழுவினரின் கிராமிய பாடல் நிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற பொது மாநாட்டில், மாவட்டக்குழு உறுப்பினரும், மூத்த தலைவருமான கே.தங்கராசு கொடியினை ஏற்றி வைத்தார். முன்னதாக மாவட்ட முன்னோடி தலைவர்களில் ஒருவரான மறைந்த எம்.சின்னப்பா நினைவு சுடரினை கட்சியின் ஒன்றியக்குழு செயலாளர்கள் வை.பழனி, செ.சிவாஜி மாவட்டக்குழு உறுப்பினர்கள் வே.ஏழுமலை, மு.சிவக்குமார் ஆகியோர் கொண்டு வந்தனர். இதனை மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.வி.ஸ்டாலின்மணி, ஆர்.சீனிவாசன், மு.செந்தில், டி.எஸ்.மோகன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
பின்னர் மாநிலக்குழு உறுப்பினர் ஜி.ஆனந்தன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் எம்.என்.எஸ்.வெங்கட்ராமன், க.கனகராஜ், மாவட்ட செயலாளர் டி.ஏழுமலை ஆகியோர் உரையாற்றினர். பிற்பகலில் செயற்குழு உறுப்பினர் மு.செந்தில் மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.மணி, ஏ.தேவி ஆகியோர் தலைமையில் தொடங்கிய பிரதிநிதிகள் மாநாட்டில் செயற்குழு உறுப்பினர் டி.எம்.ஜெய்சங்கர் அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந்தார். மாநில செயற்குழு உறுப்பினர் எம்.என்.எஸ்.வெங்கட்ராமன் மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார்.
மாவட்டச் செயலாளர் டி.ஏழுமலை வேலை அறிக்கையையும், செயற்குழு உறுப்பினர் எம்.கே.பூவராகன் நிதிநிலை அறிக்கையும் சமர்ப்பித்தனர். கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயத்தை விட்டு அழிக்கும் கல்வராயன்மலை கைகான் வளைவு திட்டப்பணிகளை தடைசெய்ய வேண்டும், தென்பெண்ணை, கெடிலம் ஆறுகள் இணைப்புத் திட்டத்தை உருவாக்கி நடைமுறைப்படுத்த வேண்டும், தனியார் தரணி சர்க்கரை ஆலையை அரசே ஏற்று நடத்த வேண்டும், சங்கராபுரத்தில் சிப்காட்டிற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் தொழிற்சாலைகளை அமைத்து வேலைவாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதனை தொடர்ந்து பாரதி புத்தகாலயத்தின் புத்தகக் கண்காட்சியும் நடைபெற்று வருகிறது.