கடலூர்,ஜுன் 15- கடலூரில் ஏலச்சீட்டு தீபாவளி பண்டு நடத்தி மோசடி செய்துவிட்டு சென்னைக்கு தப்பிவந்த 3 பேர் கைது செய்யப்பட்ட னர்.
இவர்களிடம் சீட்டு கட்டி ஏமார்ந்த கடலூர் மஞ்சக்குப்பம், நேதாஜி சாலையை சேர்ந்த சுஜாதா (வயது 45) கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் அளித்துள்ள புகார் மனு வருமாறு:
கடலூர், ஆல்பேட்டையை சேர்ந்த மனோகர் என்பவரின் மனைவி சுமதி, மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து மாதாந்திர ஏலச்சீட்டு, தீபாவளி பண்ட் போன்ற சீட்டுகள் சுமார் 10 ஆண்டுகளாக நடத்தி வந்தார்கள். கடந்த 2021ம் ஆண்டு சுமதி தன்னை சந்தித்து சுமார் 5 வருடமாக ஏலச்சீட்டு மற்றும் தீபாவளி பண்ட் சீட்டு நடத்தி வருவதாகவும், இதில் சேருமாறும், உங்கள் அழகுநிலையம் மற்றும் கடைக்கு வருபர்களிடம் சொல்லி தீபாவளி பண்ட் சீட்டில் சேர்த்து விடுமாறு கேட்டதாகவும் கூறியுள்ளார். அவர் கூறிய ஆசை வார்த்தைகளை நம்பி முதலில் மாதந்திர சீட்டில் சேர்ந்ததாகவும், பின்னர் தீபாவளி பண்ட் கட்டியதாகவும் தெரிவித்துள்ளார். இப்படி 300க்கும் மேற்பட்ட பொது மக்களிடம் மாதாந்திர சீட்டு, தீபாவளி பண்ட் பணம் பெற்று மோசடி செய்துள்ளார்.
தீபாவளி பண்ட் சீட்டு சேர்ந்தவர்களுக்கும் சரிவர பணத்தை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றிவிட்டனர். விசாரித்தபோது தன்னைப்போலவே கடலூர், ஆல்பேட்டை, வில்வநகர், மஞ்சக்குப்பட உப்பலவாடி, தாழங்குடா மற்றும் பல பகுதிகளை சேர்ந்த நபர்கள் சுமதியிடம் சீட்டு கட்டி ஏமாந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அந்த வகையில், 300 நபர்களுக்கு மேல் ஏலச்சீட்டு மற்றும் தீபாவளி பண்ட் சீட்டு மூலமாக சுமார் ரூ.20 கோடிக்கு மேல் ஏமாற்றி மோசடி செய்துள்ளனர். இதன் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, சென்னை மெரினா கடற்கரையில் மறைந்திருந்த கடலூர் மஞ்சக்குப்பத்தை சேர்ந்த மனோகர் மனைவி சுமதி, அவரது மகன் சுகன், மற்றும் சின்ன கங்கணாங் குப்பத்தை சேர்ந்த மோகன்ராஜ் மனைவி சுஜிதா ஆகியோரை கைது செய்தனர்.