districts

img

கடலூரில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் அமோக வெற்றி

கடலூர்,ஜூன்.4- கடலூர் மக்களவைத் தொகுதியில் காங்கி ரஸ் கட்சி வேட்பாளர் விஷ்ணு பிரசாத் கூடுதலாக1,85,896 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடலூர் மக்களவைத் தொகுதிக்கான வாக்குகள் எண்ணும் பணி, கடலூர் தேவனாம்பட்டினத்தில் உள்ள பெரியார் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை காலை தொடங்கியது.

 2024 மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெற்றது. கடலூர் மக்களவைத் தொகுதியில் உள்ள கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, குறிஞ்சிப்பாடி, விருத்தாச்சலம், திட்டக்குடி சட்டப் பேரவை தொகுதியில் மொத்தம் 14,12,746 வாக்காளர்கள் உள்ளனர்.

இவர்களில் 10,25,298 பேர் வாக்களித்தனர்.  வாக்குப்பதிவு சதவீதம் 72.57. கடலூர் மக்களவை தொகுதியில் காங்கிரஸ், தேமுதிக, பாமக, நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேட்சை என மொத்தம் 19 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். கடலூர் தேவனாம்பட்டினம் பெரியார் அரசு கலைக்கல்லூரியில் செவ்வாய்க்கிழமை காலை எட்டு மணி அளவில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் பாதுகாப்பு அறை திறக்கப்பட்டு தபால் வாக்குகள் வாக்கு என்னும் பணி தொடங்கியது.

இதில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் 4,55,053 வாக்குகள் பெற்றார். தேமுதிக வேட்பாளர் சிவக்கொழுந்து 2,69,157 வாக்குகள் பெற்றார், பாமக வேட்பாளர் தங்கர்பச்சான் 2,05,244 வாக்குகள் பெற்றார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மணிவாசகம் 57,424 வாக்குகள் பெற்றார்.  திமுக கூட்டணி போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஷ்ணு பிரசாத் 1,85,896 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவர் கடந்த மக்களவைத் தேர்தலில் ஆரணி தொகுதியில இருந்து வெற்றிபெற்றிருந்தார்.

;