court

img

பாலின சமத்துவத்திற்கு எதிரான கொள்கை முடிவு.... பெண்கள் குறித்த ஒன்றிய அரசின் மனநிலை கட்டாயம் மாற வேண்டும்.... சரமாரியாகச் சாடிய உச்சநீதிமன்றம்...

புதுதில்லி:
தேசிய பாதுகாப்பு அகாடமி (என்டிஏ) தேர்வை பெண்களும் எழுதலாம் என்று உத்தரவிட்டுள்ள உச்சநீதிமன்றம் பெண்கள் குறித்த ஒன்றிய பாஜக அரசின் மனநிலையை சரமாரியாகச் சாடியுள்ளது. 

தேசிய பாதுகாப்பு அகாடமி அமைப்பான என்டிஏவில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வில்பெண்கள் கலந்து கொள்வதற்கு ஒன்றிய அரசு அனுமதி மறுத்திருந்தது. இந்த தேர்வு ஆண்களுக்கு மட்டுமே என்றும் பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.இதனிடையே, ஒன்றிய  பாதுகாப்பு அமைச்சகத்தின் இந்த முடிவுக்கு எதிராக குஷ்கால்ரா என்பவர் பொது நல வழக்கை (பிஐஎல்)உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்தார்.  என்டிஏ தேர்வில் பெண்களும் கலந்துகொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்று  கோரிக்கை விடுத்தார்.இந்த வழக்கின் விசாரணை  உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கிஷண் கவுல், ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமையன்று நடைபெற்றது. விசாரணையின்போது பாதுகாப்புத்துறை அமைச்சகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், ராணுவத்தில் வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்ய பல வழிகள் உள்ளன. என்டிஏ தேர்வில் ஆண்களை மட்டும் அனுமதிப்பதால் அவர்களுக்கு கூடுதல் வாய்ப்புகள் எதுவும் ராணுவத்தில் இணையும் போது  வழங்கப்படாது.

அதனால், இது அடிப்படை உரிமை மீறல் கிடையாது என்று தெரிவிக்கப்பட்டது. ஒன்றிய அரசின் இந்த விளக்கத்தை உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை.பின்னர் நீதிபதிகள் கூறுகையில், ஒன்றிய அரசின் இந்த கொள்கை முடிவு பாலின சமத்துவத்துக்கு எதிரானது. இந்திய சட்ட விதி 14, 15, 16 மற்றும் 19-க்கு எதிரானது. பெண்களுக்கான சம உரிமையை இது மறுக்கிறது. அதனால் தேசிய பாதுகாப்பு அகடாமியின் என்டிஏ நுழைவு தேர்வை பெண்களும் எழுத
அனுமதி அளிக்க வேண்டும். இது உங்கள் மனநிலைப் பிரச்சனை ஆகும். இதை நீங்கள் (ஒன்றிய அரசு) மாற்றிக் கொள்ளுதல் நலமாக இருக்கும். உத்தரவு பிறப்பிக்குமாறு எங்களைக் கட்டாயப்படுத்தாதீர்கள்.

இந்த கொள்கை முடிவு பாலின பாகுபாட்டை அடிப்படையாகக் கொண்டது. இந்த நீதிமன்றத்தின் தீர்ப்பைக் கருத்தில் கொண்டுஇந்த விஷயத்தில் ஆக்கப்பூர்வமான பார்வையில் முடிவு எடுக்கும்படி பிரதிவாதிகளுக்கு நாங்கள் உத்தரவிடுகிறோம். நாங்கள் ஆணைகளை பிறப்பிப்பதை விட, ராணுவம் தானே முன்வந்து ஏதாவது செய்தால் நாங்கள் அதை விரும்புவோம்.ராணுவத்தில் ஆண் அதிகாரிகள் மிக உயர்ந்த பதவியை அடையும் உரிமை, பெண் அதிகாரிகளுக்கும் வழங்க வேண்டும் என்று கடந்த ஆண்டே உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதை ஒன்றிய அரசு நினைவில் கொள்ள வேண்டும்.பெண் அதிகாரிகள் தங்களது சக ஆண் அதிகாரிகளுக்கு இணையாக பணிபுரிய வேண்டியநேரம் வந்துவிட்டது. பெண்களின் உடலியல்அம்சங்களுக்கும் அவர்களின் உரிமைகளுக் கும் எந்த தொடர்பும் இல்லை. உங்களின் மனநிலை கட்டாயம் மாற வேண்டும். இது இடைக்கால உத்தரவுதான்.  வழக்கு விசாரணை முழுமையாக முடிந்த பின்னர் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்தனர்.

;