court

img

‘பாலியல் புகார்’ சிறப்பு டிஜிபி  ராஜேஷ் தாஸுக்கு எதிராகப் போராட்டம்... வாலிபர், மாணவர், மாதர்கள் மீதான வழக்குகளை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது....

மதுரை:
பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தபுகாரில் சிக்கிய சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸூக்கு எதிராக போராட்டம் நடத்திய வாலிபர், மாணவர்,மாதர்கள் மீதான வழக்குகளை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அவருக்கு கீழ் பணியாற்றும் பெண் ஐபிஎஸ் அதிகாரி எழுப்பிய புகாரால் பரபரப்பு ஏற்பட்டது. சிறப்பு டிஜிபி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும். மேலும் இந்தவழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று அரசியல் கட்சியினரும் மாதர் அமைப்புகளும் வலியுறுத்தினர். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சிறப்பு டிஜிபிக்கு எதிராக பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தினர்.
இதில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கடந்த மார்ச் 3 ஆம் தேதி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், ஜனநாயக மாதர் சங்கம்,இந்திய மாணவர் சங்கம் மற்றும் பல்வேறு மாணவர் அமைப்பினர் சேர்ந்துமுற்றுகை போராட்டம் நடத்தினர். இதில் 27 பேரை கைது செய்து2 பிரிவுகளின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனை எதிர்த்து மதுரையை சேர்ந்த ஜனநாயக மாதர்சங்க நிர்வாகிகள் ஆர். சசிகலா, கே. ராஜேஸ்வரி, ஜனநாயகவாலிபர் சங்க மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் செல்வராஜ் உட்பட 27 பேர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்தனர்.அந்த மனுவில், “சிறப்பு கூடுதல் காவல்துறை தலைவர் ராஜேஷ்தாசுடன் பணி புரியும் பெண் ஐபிஎஸ் அதிகாரியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதத்தில் கடந்த 2021 மார்ச் 03-ஆம் தேதி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெளியே பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 27 நபர்கள் போராட்டத்தில் ஈடுபட்டோம். எங்கள் 27 நபர்கள் மீது 2 பிரிவின் கீழ் பொய்யாகவழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த போன்ற குழந்தைகள், பெண்களுக்கு எதிராக நடைபெறும் சம்பவத்திற்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது.

இதற்காக பொய்யான வழக்குகள் பதிவு செய்யப்படுவது ஏற்கத்தக்கது அல்ல, எனவே, எங்கள் 27 நபர்கள் மீதுபதியப்பட்ட வழக்கில் மேல் விசாரணை நடத்த இடைக்காலதடை விதிக்கவும், எங்கள் மீது பதியப்பட்ட வழக்கை ரத்துசெய்ய உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.இந்த மனு மீதான விசாரணை திங்களன்று நீதிபதி ஹேமலதா முன்பு நடைபெற்றது. அப்போது, 27 நபர்கள் மீதுபதியப்பட்ட வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார். மாதர், வாலிபர் சங்கங்களின் தரப்பில் வழக்கறிஞர் ஜெ.பாண்டித்துரை ஆஜராகி வாதாடினார்.