புதுதில்லி, அக்.31- பெஹ்லுகான் மற்றும் அவருடைய மகன்கள் பசுக்களைக் கடத்தி வந்ததாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கை ராஜஸ்தான் உயர்நீதி மன்றம் ரத்து செய்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் பெஹ்லு கான் மற்றும் அவருடைய மகன்கள் தாங்கள் நடத்தும் பால் வியா பாரத்துக்காக 2017 ஏப்ரல் 1 அன்று, ஜெய்ப்பூரில் நடைபெற்ற மாட்டுச் சந்தையிலிருந்து மாடுகளை வாங்கிக் கொண்டு வந்தனர். பெஹ்லுகானை யும் அவரது மகன்களையும் இறைச்சிக்காக மாடுகளை கடத்தி வந்ததாகக் கூறி பாஜக ஆளும் மாநிலங்களில் இயங்கும் பசுப் பாதுகாப்புக் குழு என்கிற குண்டர் கும்பல் அவர்களைக் கொடூரமான முறையில் தாக்கியது. இரண்டு நாட்கள் கழித்து பெஹ்லுகான் இறந்துவிட்டார்.
இது தொடர்பாக தொடரப்பட்ட கொலை வழக்கில் குற்றம்சாட்டப் பட்டிருந்த ஆறு பேரையும் ஆல்வாரில் உள்ள அமர்வு நீதிமன்றம் சந்தேகத்தின் பலனை (benefit of doubt) அளித்து விடுதலை செய்தது. ஆனால் அதே சமயத்தில் ராஜஜ் தான் காவல்துறை இறைச்சிக்காகப் பசுவைக் கடத்தி வந்ததாக இறந்த பெஹ்லுகான் மீதும் அவரது மகன்கள் மீதும், பாஜக ஆளும் மாநிலங்களில் நிறைவேற்றப்பட்டுள்ளதுபோன்று ராஜஸ்தானிலும் 1995ஆம்ஆண்டு கொண்டுவரப்பட்டுள்ள ராஜஸ்தான் எருது போன்றமாடுகள் கொல்லுதல் தடைச் சட்டத்தின்கீழ் இறந்த பெஹ்லுகான் மற்றும் அவர் மகன்கள்மீது முதல் தகவல் அறிக்கைப் பதிவுசெய்து, பின்னர் குற்ற அறிக்கையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
சம்பவம் நடந்தது, பாஜக ஆட்சி யில். இப்போது அங்கே காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. எனி னும் இந்த அரசும் இந்த வழக்கை கண்டுகொள்ளவே இல்லை. இறந்த பெஹ்லுகான் மீதும் அவர் மகன் கள்மீதும் நீதிமன்றத்தில் விசாரணை நிலுவையில் இருந்து வந்தது. ‘இதற்கிடையில் இந்தச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையையும், வழக்கையும் ஆட் சேபித்து பெஹ்லுகான் மகன்களும், மாடுகளை ஏற்றி வந்த டிரக்கின் உரிமையாளரும் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். வழக்கை விசாரித்த நீதியரசர் பங்கஜ் பண்டாரி தலைமையிலான அமர்வாயம், இச்சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை யையும், மற்றும் அதன்மீது தாக்கல் செய்துள்ள குற்ற அறிக்கையையும் ரத்து செய்து உத்தரவு பிறப்பித் துள்ளது. நீதிமன்றம், பெஹ்லுகான் பால் வியாபாரத்திற்காகத்தான் மாடுகளை வாங்கி வந்தாரேயொழிய, கொல் வதற்காக அல்ல என்று கூறியிருக் கிறது. (ந.நி.)