சென்னை:
புதிய வாகனங்கள் வாங்கும்போது 5 ஆண்டு இன்சூரன்ஸ் கட்டாயம் என்றும், இந்த புதிய நடைமுறை செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்நிகழ்ந்த சாலை விபத்தில் சடையப்பன் என்பவர் பலியானது தொடர்பாக அவரது குடும்பத்தினர் இழப்பீடு கேட்டு ஈரோடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்ததீர்ப்பாயம், சடையப்பன் குடும்பத்திற்கு14 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. இதனை எதிர்த்து இன்சூரன்ஸ் நிறுவனமான நியூ இந்திய அஷுரன்ஸ் கம்பெனி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.இந்த வழக்கின் விசாரணை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்னிலை நடைபெற்றது. காப்பீட்டு நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வாகனத்திற்கான ஓட்டுநர் மற்றும் உரிமையாளர் என்ற அடிப்படையில் மட்டுமே வாகனத்துக்கு காப்பீடு எடுக்கப்பட்டதாகவும், ஓட்டுநர் அல்லாத ஒருவர் இறப்பிற்கு ஒரு லட்ச ரூபாய் மட்டுமே இழப்பீடு வழங்க முடியும் என்று தெரிவித்தார்.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி வைத்தியநாதன், ஈரோடு தீர்ப்பாய உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும் நீதிபதி கூறுகையில், புதிய வாகனத்தை வாங்கும் போது அதுஎவ்வாறு செயல்படும் என்று தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுபவர்கள், காப்பீடு நடைமுறைகளை முழுமையாக தெரிந்து கொள்வதில்லை. இது தொடர்பாக, காப்பீடு நிறுவனங்களும் முழுமையான விபரங்களை தெரிவிப்பதில்லை. செப்டம்பர் 1 ஆம் தேதி முதல், தமிழ்நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து புதிய வாக னங்களுக்கும் பம்பர் டூ பம்பர் என்ற அடிப்படையில் வாகன உரிமையாளர், ஓட்டுநர், பயணி என அனைவரையும் உள்ளடக்கும் வகையில், ஐந்து ஆண்டுகளுக்கு காப்பீடு செய்வதை கட்டாயமாக்க வேண்டும். தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், காப்பீட்டு நிறுவனங்களுக்கு உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்றும் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றியது தொடர்பாக செப்டம்பர் 30 ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.