திருப்பூர்:
தமிழகத்தில் பொது சுகாதாரக் கட்டமைப்பைமேம்படுத்த வேண்டிய அவசியம் இருந்தாலும், இப்போதைக்கு உடனடியாக அரசு மருத்துவமனைகளில் வழங்கும் உணவின் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் பாதிக்கப்பட்டோருக்கு மருத்துவ சிகிச்சை, மருத்துவமனைகளில் வழங்கும் உணவின் தரம், தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணவசூல் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான இடைக்கால அரசு இருந்த போது வழக்குத் தாக்கல் செய்தார்.
கொரோனா தொற்று தொடர்பாக தானாக முன்வந்து வழக்குப் பதிந்து விசாரணைக்கு ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம், கொரோனா தொடர்பாக பல்வேறு பொது நல வழக்குகளையும் ஒன்றாக இணைத்து விசாரணைக்கு ஏற்றது. இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் தாக்கல் செய்த பொது நல வழக்கில் குறிப்பிடப்பட்டிருந்த, அரசு பொது மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம், அளவு ஆகியவை குறித்து உயர்நீதிமன்றம் கடந்த ஜூலை 2ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட அமர்வு பிறப்பித்துள்ள இந்த உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:
அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு சொற்ப அளவில், தேவையான ஊட்டச்சத்து கள் இல்லாமல் உள்ளது என்று மனுதாரர் கூறியுள்ளார். சுகாதாரக் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டிய தேவை உள்ளது என்பது ஒருபக்கம் இருந்தாலும், அரசு மருத்துவமனைகளில் வழங்கும் உணவை தரமுள்ளதாக மேம்படுத்தவேண்டிய அவசியம் இருக்கிறது. மருத்துவமனைக்கு உணவு வழங்கும் பணியை ஏற்கும் ஒப்பந்ததாரர்கள் எப்படியாவது ஒப்பந்தத்தைப் பெற வேண்டும் என்பதற்காக தேவையான ஊட்டச்சத்து உள்ள உணவை தருவதற்கு உரிய விலையை விட மிகக் குறைவான ஒப்பந்தத் தொகையைக் குறிப்பிடுகின்றனர்.
பெருந்தொற்றுக் கால அனுபவம், சுகாதாரக் கட்டமைப்பின் குறைபாடுகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது. மிகப்பெரும் செலவு பிடிக்கும் தனியார் மருத்துவ வசதியைப் பெற முடியாதது, காப்பீடு இல்லாதது ஆகியவை பற்றி மிக விரிவான தரவுகள் அடிப்படையில் ஆய்வும், அணுகுமுறையும் தேவைப்படுகிறது. நாடு முழுவதும் நோயாளிகளின் துயரங்கள் ஒரே மாதிரி இருந்தாலும், பொது சுகாதாரக் கட்டமைப்பு, மருத்துவமனைகள், மருந்தகங்கள் உள்ளிட்டவை அரசியல் சட்டத்தின் ஏழாவது அட்டவணையில் 6ஆவது பதிவாக மாநில பட்டியலில் வருவதால் நாடு முழுவதும் ஒரே மாதிரியான நடவடிக்கைகள், வழிகாட்டுதலை மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது.மாநிலம் முழுவதும் உடல்நல கட்டமைப்புக்கு அதிக கவனம் செலுத்த வேண்டிய தேவைஉள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அர்ப்பணிப்புடன் செயல்பட்ட மருத்துவர்கள் செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்களின் கடின முயற்சியின் காரணமாக இரண்டாவது அலை மட்டுப்பட்டுள்ளது. எனினும் கொரோனா இரண்டாவது அலையில் ஏற்பட்ட அச்சுறுத்தும் அளவிலான மரணங்கள் இந்த பிரச்சனையில் தெளிவான கொள்கை தேவை என்பதை உணர்த்துகிறது. மாநிலத்திலும், மாவட்டந்தோறும் தேவைப்படும் போதுமான படுக்கை வசதி, இதில் தேவைப்பட்டால் அரசின் மேற்பார்வையுடன் தனியார் பங்கேற்பை அழைப்பது ஆகியவைபற்றி ஒருங்கிணைந்த ஆய்வு தேவைப்படு கிறது.நமது மக்கள்தொகை குறிப்பாக இளைஞர்களுடைய எண்ணிக்கை ஆகியவற்றை கணக்கில் கொள்ளும்போது பட்ஜெட் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவில் பொது சுகாதாரத்திற்கு குறைவான அளவு நிதி ஒதுக்குவதாக தெரிகிறது.
பணக்காரர்களுக்கு மட்டுமின்றி, சமூகத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த மக்களுக்கும்சுகாதார வசதி கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டியுள்ளது. இந்த விசயங்களில் கவனம் செலுத்துவது ஒருபக்கம் இருந்தாலும் கூட, அரசு மருத்துவமனைகளில் உணவின் தரத்தை மேம்படுத்துவது உடனடியாக கவனிக்க வேண்டிய விசயம் ஆகும். இந்த விசயத்தில் அரசின் பார்வை, நிலைபாட்டை நான்கு வார காலத்தில் அடுத்த விசாரணையின்போது நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.