court

img

தபால் வாக்குகள் பாதுகாப்பு... தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் அறிவுறுத்தல்....

சென்னை:
தபால் வாக்குகளில் எந்த ஒரு குற்றச்சாட்டும் இடம்பெறாத வகையில் கண்காணிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் கூறி உள்ளது.

80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள், கொரோனா பாதித்தவர்களுக்கு தபால் ஓட்டு அளிக்கும் வசதியை தேர்தல் ஆணையம் வழங்கி உள்ளது. அதன்படி தமிழக சட்டப்பேரவை தேர்தலுக் கான தபால் வாக்குப்பதிவு வெள்ளியன்று(மார்ச்26) தொடங்கியது. தேர்தல் ஆணைய குழுவினர் வீடு வீடாக சென்று தபால் வாக்குகளை பெறுகின்றனர்.இந்நிலையில், தபால் வாக்குகளை சிசிடிவி கேமரா பொருத்திய அறையில் பாதுகாக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. தபால் வாக்குகளில் எந்த ஒரு குற்றச்சாட்டும் இடம்பெறாத வகையில் கண்காணிக்க வேண்டும் என்றும் கூறி உள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளிலும் தபால் ஓட்டுப் போடுவதற்காக 1 லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு 12டி படிவம் வழங்கப்பட்டது. அதில் 12 ஆயிரம் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு பெறப்பட்டன. இதில் 7300 பேரின் விண்ணப்பம் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டன. சென்னையில் 70 வாக்குப்பதிவு குழுக்கள் வீடுகளுக்கு சென்று தபால் ஓட்டுகளை பெறும் பணியை தொடங்கினர்.

வாக்குசீட்டு முறை: நீதிமன்றம் மறுப்பு
நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் வாக்கு சீட்டு முறையை பயன்படுத்த உத்தரவிடமுடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.சென்னை உயர்நீதிமன்றத்தில் பார்த்திபன் என்பவர் தாக்கல் செய்திருந்த பொது நல மனுவில், தமிழக சட்டப்பேரவை தேர்தலில் முன்பு இருந்ததுபோல் மீண்டும் வாக்கு சீட்டு முறையை கொண்டுவருமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் வாக்குப்பதிவு எந்திரத்தை பயன்படுத்துவது தொடர்பாக தெளிவான நடைமுறைகள் இல்லை என்றும் கூறியிருந்தார்.இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.அப்போது தேர்தல் ஆணையம் சார்பில் இதே கோரிக்கை உச்ச நீதி மன்றம் விசாரித்து உத்தரவிட்டுள்ளது என்றும், வாக்குப் பதிவு எந்திரம் அறிமுகம் செய்யப்பட்டு தேர்தல்கள் நடைபெற்று வருகிறது. அதனால், மீண்டும் வாக்கு சீட்டு முறை கொண்டுவர வாய்ப்பில்லை என்றார்.இந்த வாதத்தை ஏற்ற நீதிபதிகள் ஏற்கனவே உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த காரணத்தால் இதில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று கூறி வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.