court

img

வீடு வீடாகச் சென்று ஆதரவு திரட்ட 5 பேருக்கு மட்டுமே அனுமதி....

சென்னை:
தமிழகச் சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 2 வாரங்களே உள்ளன.வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியாகியிருக்கும் நிலையில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. 

இந்த நிலையில் தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று நோய் பரவத் தொடங்கியுள்ளது. கடந்த ஒருவாரத்தில் மட்டும் பயப்படும் வகையில்கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளது.இதன் காரணமாகக் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரத்தையும், ஓட்டுப்பதிவையும் பலத்த பாதுகாப்புடன் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் ஆலோசனை செய்து வருகிறது.அதன்படி, அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். வாக்குசேகரிக்கச் செல்பவர்கள் தனி மனிதஇடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும். அதற்கேற்ப வாகனங்களைத் தயார் செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவை தவிரப் பொதுக்கூட்டங்கள், முக்கியத் தலைவர்களின் பிரச்சாரங்களிலும் சில கட்டுப்பாடுகளைத் தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ளது. பொதுக் கூட்டங்களில் அதிகமானநபர்களைப் பங்கேற்க அனுமதிக்கக் கூடாது என்பதை அரசியல் கட்சிகள் உறுதி செய்ய வேண்டும் என்று தேர்தல்ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

வேட்பாளர்கள் வீடு வீடாகச் சென்றுவாக்குச் சேகரிப்பதற்கு எந்தத் தடையும் இல்லை. ஆனால் வேட்பாளருடன் தாரைத் தப்பட்டை முழங்கக் கூட்டமாகத் தொண்டர்கள் செல்ல வேண்டாம் என்று தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. வேட்பாளருடன் சேர்த்து மொத்தமாக 5 பேருக்கு மேல் செல்லக்கூடாது என்றும் தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. அரசியல் தலைவர்கள் பொதுக்கூட்டம் நடத்தினால் மிகப்பெரிய மைதானங்களில் மட்டுமே அனுமதி வழங்க வேண்டும் என்றும், தொண்டர்கள் பொதுக்கூட்டத்துக்கு வருவதற்கு ஒரு வழியும், வெளியே செல்வதற்கு மற்றொரு வழியும் ஏற்பாடு செய்யவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

வேட்பாளருடன் ஆட்டோக்களில் கொடி கட்டி செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நிறைய ஆட்டோக்கள் வேட்பாளர் பின்னால் அணிவகுத்துச் சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. வேட்பாளருடன் ஒரே ஒரு வாகனம்மட்டுமே செல்லலாம். அந்த வாகனத்துக்கும் வேட்பாளர் முறைப்படி விண்ணப்பித்து அனுமதி பெற்று இருக்க வேண்டும். இதேபோன்று பிரச்சாரத்திற்கும் பல்வேறு நெறிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. வாக்குப்பதிவைச் சுமூகமாக நடத்தும் வகையில் கொரோனா அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு பாதுகாப்பு அம்சங்கள் அனைத்தையும் செய்ய வேண்டும் என்றும் தேர்தல்ஆணையம் கூறியுள்ளது. தேவைப்பட்டால் தேர்தல் பிரச்சாரத்துக்கும், வாக்குப்பதிவுக்கும் கூடுதல் கட்டுப்பாடுகள் கொண்டு வர தேர்தல் ஆணையம்தயாராகி வருகிறது.

முகக் கவசம் அவசியம்: நீதிமன்றம்
மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த ஜலாவுதீன் என்பவர் தாக்கல் செய்த மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், சமீபகாலமாகக் கொரோனா பரவல்அதிகரித்து வருவது, 2 ஆவது அலையாக இருக்கலாம். மேலும், தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுவிட்டதால், அதில் தலையிட முடியாது. பிரச்சாரங்களுக்கு தடை விதிக்க முடியாது என்று கூறினர்.பின்னர், பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொள்ளும் அனைவரும் முகக்கவசம் அணிவதையும் தனி நபர் விலகலையும் பின்பற்றுவதை அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் உறுதி செய்ய வேண்டும். இதுதொடர்பாக அறிவுறுத்தல்களை தேர்தல் ஆணையம் பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.