court

img

இந்திய மீனவர்கள் கொல்லப்பட்ட சம்பவம்... உள்துறை செயலர் பதிலளிக்க உத்தரவு.....

மதுரை:
இலங்கைக் கடற்படையினரால் சமீபத்தில் கொலை செய்யப்பட்ட நான்கு இந்திய மீனவர்களுக்கு  இலங்கை அரசு உரிய நிவாரணம் வழங்கவேண்டும்.

கொலை செய்த இலங்கைக் கடற்படையினரை கைது செய்ய கோரிய வழக்கில் மத்திய உள்துறை செயலர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ்  சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் “தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சட்டவிரோதமாக கைது செய்வது, கொலை செய்வது, படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளை சேதப்படுத்துவது, துப்பாக்கி முனையில் தமிழக மீனவர்களை கடத்துவது, சட்டவிரோதமாக சிறையில் அடைப்பது போன்ற  செயல்கள் செய்து வருகின்றனர்.கடந்த பத்து ஆண்டுகளில் 1,500 இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கொல்லப்பட்டுள்ளனர்.

2021 ஜனவரி 18-ஆம் தேதி மீன் பிடிப்பதற்காக  கடலுக்குச் சென்ற மெசியா, நாகராஜ், செந்தில் குமரன், சாம்சந்தவின் ஆகிய நான்கு பேரையும் இலங்கைக் கடற்படையினர் கைது செய்து துன்புறுத்தி கொலை செய்து கடலில் வீசியுள்ளனர்.கொலை செய்யப்பட்ட நான்கு மீனவர்களுக்கு இலங்கை அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். கொலை செய்த இலங்கைக் கடற்படையைச் சேர்ந்த நபர்களை கைது செய்ய வேண்டும். இந்திய மீனவர்களையும் அவர்களது உடைமைகளையும் காப்பாற்றுவதற்கு முறையான வழிகாட்டுதல்களை ஏற்படுத்தவும் உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி ஆகியோர் அமர்வு முன்பு வியாழனன்று விசாரணைக்கு வந்தது. இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய உள்துறை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.