இந்தியப் பயனர்களின் தனியுரிமை உரிமையை மீறிவிட்டு தப்பித்து கொள்ள முடியாது என வாட்ஸ்ஆப் மற்றும் அதன் தாய் நிறுவனமான மெட்டாவை உச்சநீதிமன்றம் கடுமையாக எச்சரித்துள்ளது.
2021 ஆம் ஆண்டு வாட்ஸ்ஆப் தனியுரிமைக் கொள்கை தொடர்பாக, போட்டி ஆணையம் (CCI) விதித்த ரூ.213.14 கோடி அபராதத்தை எதிர்த்து வாட்ஸ்ஆப் தாக்கல் செய்த மேல்முறையீட்டை உச்ச நீதிமன்றம் விசாரித்தது.
விசாரணையின் போது, “தரவு பகிர்வு என்ற பெயரில் மக்களின் தனியுரிமை உரிமையுடன் விளையாட முடியாது” என்று உச்ச நீதிமன்றம் வாட்ஸ்ஆப் மற்றும் மெட்டாவை கடுமையாக எச்சரித்தது. பயனர்களுக்கு opt-out (விலகும்) வாய்ப்பு இல்லாதது மிகப்பெரிய பிரச்சினை என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
“கிராமப்புறத்தில் இருக்கும், தன் மொழி மட்டுமே அறிந்த ஒரு சாதாரண நபர் உங்கள் விதிமுறைகளை எப்படிப் புரிந்துகொள்வார்?” என்று தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.
உச்ச நீதிமன்றம், வாட்ஸ்அப் தனது தனியுரிமைக் கொள்கை மற்றும் தரவு பகிர்வு எவ்வாறு நடைபெறுகிறது என்பதை விளக்கும் சத்தியப்பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும், ஒன்றிய அரசை வழக்கில் தரப்பினராக இணைத்து, வழக்கை பிப்ரவரி 9க்கு ஒத்திவைத்தது.
