புதுதில்லி,மே.21- பேராசிரியர் அலிகானுக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. இதற்கு பலரும் ஆதரவினை தெரிவித்து வருகின்றனர்.
ஹரியானா மாநிலம் அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் அலிகான் மஹ்முதாபாத் ஆபரேசன் சிந்தூர் குறித்து பதிவிட்டதற்காக பாஜக நிர்வாகி அளித்த புகாரின் பேரில் அலிகான் கைது செய்யப்பாட்டார்.
அவரது பதிவில் “வலதுசாரிகள் பலர் கர்னல் சோபியாவை பாராட்டுவது மகிழ்ச்சியளிக்கிறது அதேபோல் கும்பல் படுகொலைகள், தன்னிச்சையான புல்டோசர் தாக்குதல்கள் மற்றும் பாஜகவின் வெறுப்பு அரசியலால் பாதிக்கப்பட்ட மற்றவர்களை இந்தியக் குடிமக்களாகப் பாதுகாக்க வேண்டும் என்றும் அவர்கள் சத்தமாகக் கூறலாம்” எனவும்
மேலும் "இரண்டு வீராங்கனைகள் மூலம் தகவலை வெளியிடும் அணுகுமுறை முக்கியமானது. ஆனால் இந்த அணுகுமுறை யதார்த்தமாக மாற்றப்படவில்லையென்றால் அது வெறும் பாசாங்குத்தனமான ஒன்றாகதான் இருக்கும்" என்று பேராசிரியர் அலி கான் கூறினார்.
இருப்பினும், பேராசிரியர் அலி கான் தனது பதிவில் இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பாராட்டினார்.
"பொதுவான முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் கள யதார்த்தம் அரசாங்கம் காட்ட முயற்சிப்பதை விட வேறுபட்டது. ஆனால் அதே நேரத்தில் இந்த பத்திரிகையாளர் சந்திப்பு (கர்னல் சோபியா மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங்கின் பத்திரிகையாளர் சந்திப்பு) இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமையைக் காட்டுகிறது. இந்தக் கருத்தாக்கம் இன்னும் உயிர்ப்புடன் உள்ளது என்பதையும் காட்டுகிறது" என்று அவர் எழுதியுள்ளார்.
பேராசிரியர் அலி கான் தனது பதிவின் இறுதியில் 'ஜெய் ஹிந்த்' என்று எழுதியிருந்தார்.
இவரது கைதுக்கு ஆசிரியர் சங்கங்கள், பத்திரிகையாளர்கள் உட்படப் பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இவருக்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.