கொரோனா பரவல் 2 ஆவது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதனால் ஏராளமானவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அதிகளவில் ஆக்சிஜன் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், நாட்டில் பல மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு தாமாக முன்வந்து இதனை வழக்காக எடுத்துள்ளது. இந்நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி தூத்துக்குடி மக்களின் கடுமையான போராட்டத்தால் அரசு நடத்திய துப்பாக்கிச்சூட்டுக்கு பின்னால் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையானது வேதாந்தா நிறுவனத்தின் மூலம் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனுவை தாக்கல் செய்துள்ளது. தற்போதுநாட்டில் நிலவும் ஆக்சிஜன் பற்றாக்குறையைப் போக்க தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்திகலனை திறக்க அனுமதியளிக்க வேண்டும் என கோரியுள்ளது.
இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் வழக்கறிஞர் துஷார் மேத்தா, கொரோனா விவகாரத்தில் ஆக்சிஜன்பற்றாக்குறை ஏற்பட்டிருப்பது உண்மைதான். ஆகையால், தூத்துக்குடி ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் தயாரிக்க மட்டும் அனுமதி கொடுக்கலாம் என மத்திய அரசு சார்பில் தெரிவித்துள்ளார். ஆனால், தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலை விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளதை சுட்டிக்காட்டி அதனை திறக்க எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.
மத்திய அரசு - வேதாந்தா நடத்தும் நாடகம்
இந்நிலையில், தூத்துக்குடியில் அவசரஅவசரமாக ஏப்ரல் 23 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடத்த கருத்துக் கேட்புக் கூட்டத்தில் மக்கள் அழைப்பு இல்லாமல், பாதிக்கப்பட்ட கிராம மக்கள் கேள்விப்பட்டு மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்தை முற்றுகையிட்டு பலத்த எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.இதனால் உச்சநீதிமன்றத்திலும் தமிழகஅரசு மக்களின் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கூடாது. இதனால் சட்டம் - ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும் மத்திய அரசு ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு பதிலாக நாட்டின் மற்றபகுதிகளில் உள்ள ஆலைகளில் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்கலாம் என்றும் தமிழகஅரசு யோசனை கூறியுள்ளது. இதில் தமிழக அரசின் வாதத்தை சமம் குடிமக்கள் இயக்கம் பாராட்டுகிறது. மத்திய அரசானது வேதாந்தா நிறுவனத்துடன் சேர்ந்து பெரிய நாடகத்தை நடத்துகிறது என்பது தமிழக மக்களுக்கு நன்றாக விளங்குகிறது.இந்நேரத்தில் மக்கள் நலன்கருதி, தூத்துக்குடி மக்களின் குரலுக்கு ஏற்ப தமிழகஅரசு தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கவேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை முற்றிலும் பிரித்து அகற்றிவிட்டு நிலத்தை அரசு கையகப்படுத்தி அந்த நிலத்தில் தமிழக அரசு நேரடியாக ஆக்சிஜன் உற்பத்தி நிறுவனத்தை நிறுவி நடத்துவதில் எந்தவித ஆட்சேபணையும் இல்லை. ஆனால், பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி, ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி அளிக்கப்படும் பட்சத்தில் பொதுமக்கள் ரீதியாக மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, மத்திய அரசானது வேதாந்தா நிறுவனத்துடன் சேர்ந்து நடத்தும் நாடகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். எந்த நிலையிலும் வேதாந்தா நிர்வாகம் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க அனுமதிக்கக்கூடாது. தமிழக அரசு தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கவேண்டும் என சமம் குடிமக்கள் இயக்கம் கேட்டுக்கொள்கிறது என்று இயக்கத்தின் தலைவர் வழக்கறிஞர் சி.சே.இராசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.