court

img

தடுப்பூசியின் விலையை தனியார் நிர்ணயிப்பதை ஏற்க முடியாது... மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் இடித்துரை...

புதுதில்லி:
தடுப்பூசியின் விலையை தனியார் நிறுவனம் நிர்ணயிப்பதை ஏற்க முடியாது என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் இடித்துரைத்துள்ளது.

தடுப்பூசி தொடர்பான வழக்கு   உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் சந்திரசூட், எல்.நாகேஸ்வர ராவ்,எஸ்.ரவீந்திர பட் அமர்வு தடுப்பூசி உற்பத்திக்கு மத்திய அரசு நிதி உதவிசெய்துள்ளது.  தடுப்பூசி அனைவருக்குமான “பொதுச்சொத்து”,  100சதவீத தடுப்பூசிகளை மத்திய அரசு ஏன் வாங்கவில்லை என கேள்வியெழுப்பினர். மேலும் பல்வேறு கேள்விகளை மத்திய அரசை நோக்கி அவர்கள் எழுப்பினர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் ஆக்சிஜன் சிலிண்டர்கள், மருந்துகள், படுக்கைகள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக சமூக வலைதளங்களின் உதவிகளை நாடுகின்றனர். இதை எந்த மாநில அரசுகளும் தடுக்கக்கூடாது. அவ்வாறு தடுப்பது நீதிமன்ற அவமதிப்பாகும் என்றனர். நீதிபதி சந்திரசூட், “கொரோனா பாதிப்புகள் குறித்த விவரங்கள், தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் விவரம்  பதிவு செய்யப்படுகிறது. அதே நேரத்தில் கல்வியறிவில்லாதவர்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள
வேண்டும். அவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வதை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்றார்.

 தடுப்பூசியின் விலையை தனியார் நிறுவனங்கள் நிர்ணயிப்பதை ஏற்க முடியாது. தடுப்பூசி நிறுவனங்கள் தடுப்பூசியை மத்திய அரசுக்கு ரூ.150-க்கும், மாநில அரசுகளுக்கு ரூ.300-க்கும்விற்கிறது. ஒரே நாட்டில் ஏன் இந்த விலை வேறுபாடு?  விலை வித்தியாசம் ரூ. 30,000 முதல் 40,000 கோடி வரை அதிகரிக்கும்.  அஸ்ட்ராஜெனகா  நிறுவனம் தனது தடுப்பூசியை அமெரிக்கா மக்களுக்கு மிகக் குறைந்தவிலையில்  வழங்குகிறது, ஏன் நாம் மட்டும் தடுப்பூசிக்கு மிக அதிக விலை கொடுக்க வேண்டுமென  என்று நீதிபதி பட் கேள்வியெழுப்பினார்.

மேலும் 100 சதவீத தடுப்பூசிகளை மத்திய அரசு ஏன் வாங்கவில்லை? ஏன்அவற்றை நாடு முழுவதும் சமமாக விநியோகிக்கவில்லை,  50 சதவீதவிநியோகத்தை மத்திய அரசு உற்பத்தியாளர்களிடமே கொடுத்துவிட்ட நிலையில் 50 சதவீத மருந்துகள் மூலம்எப்படி சமத்துவத்தை நிலை நாட்ட முடியும். 100 சதவீதம் தடுப்பூசியை ஏன் வாங்கக்கூடாது. தடுப்பூசி உற்பத்திக்கு மத்திய அரசு நிதி உதவி செய்துள்ளது. எனவே தடுப்பூசிஅனைவருக்குமான “பொதுச்சொத்து”, தடுப்பூசிகளைப் பெறுவதில் மாநிலங்களுக்கு முன்னுரிமை கிடைக்குமா? தடுப்பூசிகள் தொடர்பாக தேசிய நோய்த்தடுப்பு திட்டக் கொள்கையை ஏன் அரசால் பின்பற்ற முடியவில்லை என நீதிபதிகள் கேள்வியெழுப்பினர்.

தொடர்ந்து பேசிய நீதிபதி சந்திரசூட்,“மருத்துவ ஊழியர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களை ‘கோவிட் வாரியர்ஸ்’ என்று அறிவிப்பது மட்டும் போதாது. மருத்துவ ஊழியர்கள் பற்றாக்குறையைப் போக்க அரசு என்ன செய்யப்போகிறது. கொரோனாவிற்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் எப்படி பாதுகாக்கப்படுகிறார்கள்” எனவும் கேள்வியெழுப்பினார்.