உச்ச நீதிமன்றத்தில் ஹிஜாப் வழக்கின் விசாரணை முடிந்த நிலையில், இன்று இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
கர்நாடக மாநிலம் உடுப்பி பியுசி கல்லூரியில் பயிலும் இஸ்லாமிய மாணவிகள் சிலர் ஹிஜாப் அணிய கர்நாடக அரசு தடை விதித்தது. இந்தத் தடையை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அம்மாணவிகள் வழக்கு தொடர்ந்தனர். இதைத் தொடர்ந்து, வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், அரசு விதித்த செல்லும் என்று கடந்த மார்ச் 15-ஆம் தேதி உத்தரவிட்டது. இதனை அடுத்து, அம்மாணவிகள் உச்ச நீதிமன்றத்தில் இது குறித்து மனுத் தாக்கல் செய்தனர். இந்த வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதான்சு துலியா ஆகியோர் அமர்வில் கடந்த மாதம் 22-ஆம் தேதி நடந்து முடிந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்த கர்நாடகா அரசின் முடிவு செல்லும் என நீதிபதி ஹேமந்த் குப்தாவும், அரசின் முடிவை ரத்து செய்து ஹிஜாப் அணிந்து வர தடை இல்லை என மற்றொரு நீதிபதியான துலியாவும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ளனர். இதைத்தொடர்ந்து, இந்த வழக்கை முறையான வழிகாட்டலுக்காக தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.